டாக்டர்கள், 'ஸ்டிரைக்' முடிவு

மதுரை: பல்கலை மானியக்குழு நிர்ணயித்த சம்பளம் வழங்காததை கண்டித்து, செப்., 21ல் வேலை நிறுத்தம் செய்ய, அரசு டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். அனைத்து அரசு
டாக்டர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர், டாக்டர் செந்தில் கூறியதாவது: அரசு, இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், 20 ஆயிரம் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அரசு பொறியியல் கல்லுாரி, விவசாய பல்கலை பேராசிரியர்களுக்கு பல்கலை மானியக்குழு நிர்ணயத்த சம்பளத்தை, தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பேராசிரியர், டாக்டர்களுக்கு இச்சம்பளத்தை வழங்க மறுக்கிறது.பணியில் சேர்ந்து, 13 ஆண்டுகளுக்கு பின் தர வேண்டிய ஊதிய விகிதமும் வழங்கப்படவில்லை.இக்கோரிக்கையை, இரண்டு ஆண்டுகளாக, அரசிடம் கேட்டு வருகிறோம். அரசு செவி சாய்க்காததை கண்டித்து, ஆக., 24ல், மாவட்ட தலைநகரில் ஊர்வலம் நடத்தப்படும்.ஆக., 27 முதல், சிகிச்சைக்கு பாதிப்பின்றி, நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் போராடுவோம். செப்., 21-ல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்