எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்பை பதிவு செய்ய ஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 16-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட உள்ளது. அன்று முதல் 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்லாமல் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பை மாணவர்கள் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதிநிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.

மதிப்பெண் சான்றிதழ்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் ( https://tnvelaivaaippu.gov.in ) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இந்த வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 16-ந் தேதி வழங்கப்பட உள்ளது. எனவே அன்று முதல் 30-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

ஆதார் அட்டை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் தங்கள் அளவிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம்.

இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதிநிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.