ஜூலையில் வருமான வரி கணக்கு 18 லட்சம் பேர் கூடுதலாக தாக்கல்

தமிழகத்தில், ஜூலை வரை, 24.68 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் மாதத்தை விட, அதிகமாக, 18 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.கடந்த, 2017 - 18ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரல் துவங்கி நடந்து வருகிறது. நடப்பாண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


வருமான வரியை குறைப்பதற்காக, வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கு கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நடைமுறை, நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.மேலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஜூலையிலிருந்து, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜூலை வரை, நாடு முழுவதும், 3.43 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, ஜூன் முடிவில், 77.25 லட்சமாக இருந்தது. தமிழகத்தில், 24.68 லட்சம் பேர், மின்னணு முறையில், ஜூலையில் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, ஜூன் நிலவரப்படி, 6.3 லட்சமாக இருந்தது. தேசிய அளவில் மஹாராஷ்டிரா, 53.79 லட்சம்; குஜராத், 34.59 லட்சம்; உத்தர பிரதேச மாநிலத்தில், 29.66 லட்சம் பேர் அதிகபட்சமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜூலை, 31க்குள் தாக்கல் செய்யவில்லை எனில், அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், 2.65 கோடி பேர், அதிகமாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில், 18 லட்சம் பேர், ஜூலையில் கூடுதலாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.