வேலைவாய்ப்புக்கு பள்ளியில் பதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு வசதி

பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, https://tnvelaivaaippu.gov.in என்ற, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில், நேரடியாக பதிவு செய்யும் வசதி, 2011 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அன்று முதல், 30ம் தேதி வரை, 15 நாட்களுக்கு, ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, பள்ளியிலேயே, இணையதளம் வழியே பதிவு செய்யலாம். 


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம் அல்லது தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம்.பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே பதிவு செய்துள்ள மாணவர்கள், அந்த பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில், தாங்கள் படித்த பள்ளிகளை அணுகி, பிளஸ் 2 கல்வித் தகுதியை, கூடுதலாக பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, புதிதாக பதிவு செய்யும் மாணவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் ஆகிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி, பதிவு மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks