கால்நடை மருத்துவ கலந்தாய்வு 24–ந்தேதி தொடங்குகிறது

கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 24–ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2018–19–ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர இணையதளம் மூலம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்தனர். இதில் 11 ஆயிரத்து 745 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானதாக உள்ளன. அதன்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் (கலையியல் பிரிவு) 288 இடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 18 இடங்களும், பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் 94 இடங்களும் என மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சிறப்பு கலந்தாய்வு 24–ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு தொழிற்பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச். (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்) பாடப்பிரிவுக்கு 25–ந்தேதி காலை 9 மணிக்கு பொது கலந்தாய்வு தொடங்குகிறது. பி.டெக். (உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம்) பாடப்பிரிவுகளுக்கு 26–ந்தேதி காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் (www.tanuvas.ac.in அல்லது www.2.tanuvas.ac.in ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்து மாணவர்கள் எந்த நேரத்தில் கலந்தாய்வு என்பதை அறிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

கலந்தாய்வுக்கு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வரவேண்டும். அப்போது மாணவ–மாணவிகள் கலந்தாய்வு கடிதம், தேவையான சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

இத்தகவலை மாணவர் சேர்க்கை தலைவர் தெரிவித்துள்ளார்.