நீட் தேர்வு முடிவால் வெளியான ஒரு உண்மை தகவல் இதுதான்!

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த தமிழக மாணவ, மாணவிகள் எத்தனை பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் வெளியானது.
இதில், தமிழகத்தில் இருந்து தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 39.56 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில், இந்த வெற்றி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.72 சதவீதம் கூடுதலாகும்.
அதாவது, தேர்வெழுதிய 1.14 லட்சம் மாணவ, மாணவிகளில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாநிலங்களில் ராஜஸ்தான் 74%, தில்லி 74%, ஆந்திரம் 73%, தெலங்கானா 69%, உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்கள் தலா 60% தேர்ச்சியுடன் முன்னணியில் உள்ளன.
முதல் 50 இடங்களில் ஒருவர் மட்டுமே... நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களுக்கான பட்டியலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. அவற்றில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மாணவி கே.கீர்த்தனா 676 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 12-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவி இவர் மட்டும்தான். கடந்த ஆண்டு முதல் 25 இடங்களைப் பெற்றவர்களின் விவரங்களை சிபிஎஸ்இ வெளியிட்டது. அவர்களில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவ, மாணவிகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது எத்தனை மாணவ, மாணவிகள்தான் வெளி மாநிலங்களில் தேர்வெழுதினார்கள் என்ற சரியான புள்ளி விவரம் தெரியவரவில்லை.
தற்போதைய புள்ளி விவரத்தில் அந்த உண்மை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் இருந்து நீட் தேர்வெழுத விண்ணப்பித்த 1,14,602 பேரில் 1,07,288 பேர் மட்டுமே தமிழகத்தில் தேர்வெழுதினார்கள். மீதமுள்ள 7,314 பேர் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதியுள்ளனர். ஆரம்பத்தில் வெறும் 1500 மாணவ, மாணவிகள் என்றும், ஒரு சில மாணவ மாணவிகள் என்றும் வெளியான தகவல் இன்று பொய்யென்பது நிரூபணமாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தமுள்ள 45 மருத்துவக் கல்லூரிகளில் 5,660 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், ரேங்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வெளி மாநில மக்கள் தமிழகக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றால், தமிழக மாணவ, மாணவிகள் வெளி மாநிலங்களில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மிக மோசமான நிலையும் ஏற்படும்.