நிபா வைரஸ் தாக்கம்: அச்சத்தால் விடுமுறை கேட்கும் அரசு ஊழியர்கள்

கோழிக்கோடு: நிபா வைரஸ் தாக்கிய இரண்டு நோயாளிகள் மரணம் அடைந்ததை அடுத்து பலாசேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் விடுமுறை கேட்டுள்ளனர்.

கேரளாவில் வட மாவட்டங்களைத் தாக்கிய நிபா வைரஸ் காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், தாலுகா அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் நேற்று மரணம் அடைந்ததை அடுத்து, தங்களுக்கும் அந்த நோய் தாக்குமோ என்ற அச்சத்தில், விடுமுறையில் செல்ல அனுமதிக்குமாறு மருத்துவர்களும், செவிலியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் ஏராளமான அரசு அலுவலகங்களையும், தாற்காலிகமாக மூடி வைக்க அனுமதிக்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுகின்றனர். உதாரணமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களை சில நாட்களுக்கு மூடி வைக்க அனுமதிக்கும்படி ஊழியர்கள் கோரியுள்ளனர்.
நிபா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நீதிமன்றங்களை மூடி வைக்க அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.