என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு கோவை மாணவி முதல் இடம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.


என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ‘ரேண்டம் எண்’ வெளியிடப்பட்டன.

மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதனை வெளியிட்டார்.

இந்த தரவரிசை பட்டியல் www.an-n-au-n-iv.edu என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

என்ஜினீயரிங் படிக்க 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 387 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

தகுதி பெற்ற 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 விண்ணப்பதாரர்களில் 65 ஆயிரத்து 926 பேர் மாணவர்கள் மற்றும் 38 ஆயிரத்து 527 பேர் மாணவிகள் ஆவர்.

சான்றிதழ் சரிபார்ப்பில் மற்றும் தரவரிசை பட்டியலில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்ய மாணவ-மாணவிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. தவறை சரிசெய்ய அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செயலாளரை நேரில் அணுக வேண்டும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்த ஆண்டு 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. 26 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.

தரச்சான்று உள்ள கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலம் வரும் மாணவர்களுக்கு கட்டணம் ரூ.55 ஆயிரம் ஆகும். தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.50 ஆயிரம் ஆகும்.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தரச்சான்று உள்ள கல்லூரிகளில் கட்டணம் ரூ.87 ஆயிரம் என்றும், தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.85 ஆயிரம் என்றும் உள்ளது. தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தவர்களில் 47 ஆயிரத்து 29 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.

தனியார் கல்லூரிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும்.

உயர் கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் 2-வது இடத்திலும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் 3-வது இடத்திலும் உள்ளது.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் பின்வருமாறு:-

1. கீர்த்தனா ரவி - கோவை

2. எஸ்.ரித்விக் - மதுரை.

3. ஆர்.ஸ்ரீ வர்ஷினி -திருச்சி.

4. அர்ஜூன் அசோக் -கோவை.

5. ஆர்.சுஜித்ரா - புதுக்கோட்டை.

6. ஏ.அப்துல் காதர் -கிருஷ்ணகிரி.

7. எஸ்.யமுனா ஸ்ரீ -சிவகங்கை.

8. என்.ஏ.நிஷா - திருவள்ளூர்.

9. எஸ்.நிதிஷ்குமார் -தஞ்சாவூர்.

10. ஏ.ஏ.மணிகண்டன் -திருவள்ளூர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன்

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த கீர்த்தனா ரவி கூறியதாவது:-

நான் கடந்த ஆண்டு கேரளா மாநிலம், பாலக்காடு பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். ஆங்கிலம் உள்பட அனைத்து பாடங்களிலும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றேன். மொத்தம் 1200 மதிப்பெண்ணுக்கு 1200 மதிப்பெண் எடுத்துள்ளேன். கோவை சொந்த ஊர் என்பதால் நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்றேன்.

எனக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேர விருப்பம் இல்லை. நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி.வேதியியல் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறேன். இப்போது அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடம் வந்ததற்கு மகிழ்ச்சி. என்ஜினீயரிங் சேர்வது குறித்து யோசித்து தான் முடிவு எடுக்க விரும்புகிறேன்.

காரணம் நான் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அதிகாரியாக விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.