அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு இன்றுடன் முடிகிறது அவகாசம்

அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 


இதில், மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில், மாணவர்களுக்கு விருப்பப்படி இடங்கள் ஒதுக்கப்படும்.


இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஜூன் இறுதியில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்த நிலையில், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க, மே, 3ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மே, 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.


ஆனால், ஸ்டெர்லைட் பிரச்னை காரணமாக, துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்ய முடியாமல், மாணவர்கள் திணறினர்.
இதையடுத்து, இன்று வரை கூடுதல் அவகாசம் வழங்கி, அண்ணா பல்கலை உத்தரவிட்டது. இன்று நள்ளிரவு, 11:59 மணிக்கு பின், பதிவு செய்யும் வசதி நிறுத்தப்படும் என, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின், 38வது பட்டமளிப்பு விழா, வரும், 19ல், பல்கலை வளாகத்தில் நடக்கிறது.

இதில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வில், பல்கலை அளவில், 'ரேங்கிங்' பெற்ற மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பட்டம் வழங்கப்படும். இதில், 64 பேர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவில், இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின், முன்னாள் இயக்குனர், பலராம் பங்கேற்க உள்ளார்.மேலும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகளில், அண்ணா பல்கலை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.