டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைப்பு?

மொபைல் போன் முதல், வங்கி கணக்கு வரை, ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில், விரைவில், 'டிரைவிங் லைசென்சுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், போதையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிப்பது எளிதாகும். விபத்தை ஏற்படுத்தியவர், வாகனத்தை கைவிட்டு, தலைமறைவானாலும், அதில் உள்ள விரல் ரேகை மூலம், அவரை அடையாளம் காண முடியும்.

குற்றவாளிகள் பிடிபடும்போது, தங்கள் பெயரை மாற்றிக் கூறினாலும், விரல் ரேகை மாறாது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு, டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது.