SRM. பல்கலைக்கழக என்ஜினீயரிங் கலந்தாய்வு 7-ந் தேதி தொடக்கம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் இளநிலை பொறியியல் (என்ஜினீயரிங்) படிப்புகளின் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ( SRMJEEE ) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரையிலும் நடந்தது. நாடு முழுவதும் 123 மையங்களில் நடந்த இந்த தேர்வில், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 825 மாணவர்கள் பங்கேற்றனர்.


இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் கடந்த 1-ந் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.srmuniv.ac.in) வெளியிடப்பட்டன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த உஜ்வால் சிங் என்ற மாணவர் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். நுழைவுத்தேர்வு மூலம் 76 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் முதல் 10 ஆயிரம் பேரில் 66 சதவீதம் பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள். அதில், தமிழகம், உத்தரபிரதேசம், மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.

அரியானா மற்றும் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 10-ந் தேதி வரை அந்தந்த வளாகங்களில் நடைபெற உள்ளது. எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி.) கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு வருகிற 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் சென்னை காட்டாங்குளத்தூர் வளாகத்திலும், என்.சி.ஆர். வளாகத்திலும் நடைபெறும்.

நுழைவுத்தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் முதல் 3 ஆயிரம் பேருக்கு ரூ.30 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தரவரிசையில் முதல் 100 இடங்களை பிடிப்பவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் தள்ளுபடி, 101 முதல் 500 இடங்களுக்குள் பிடிப்பவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும்.

மேற்கண்ட தகவல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.