கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ்; தமிழ் பாடத்துக்கு ஒரே தேர்வு: செங்கோட்டையன்

சென்னை : இனி, பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அதில், மாணவ, மாணவிகளுக்கு இனி கிழியாத காகிதத்தில் அதாவது non tearable paperல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக், இனி தமிழ்ப் பாடத்துக்கு இரண்டு தாளாக இல்லாமல் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்றும், ரூ.9 கோடி செலவில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை நேரத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.