பொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வருவதன் எதிரொலி: சேர்க்கை இடம் கிடுகிடு சரிவு!




சென்னை: பொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வருவதன் எதிரொலியாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இந்திய அளவில் 1.57 லட்சம் அளவுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கை இடம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதே காரணத்தால், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைக் குறைத்துக் கொள்வதும், பொறியியல் கல்லூரியை மூடுவதற்கான விண்ணப்பம் அதிகரிப்பதுமாக உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 139 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள அனைத்திந்திய தொழிற்கல்வி கவுன்சில் அனுமதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 15,981 இடங்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து, இந்தியாவில் உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூடிவிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் ஒரு 3,252 மாணவர் சேர்க்கைக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் கல்லூரிகள் அல்லாமல் 3 எம்பிஏ கல்வி நிலையங்கள், 6 எம்சிஏ கல்வி மையங்களும் தங்களது கல்விப் பணியை நிறுத்திக் கொள்ள அனுமதி பெற்றுள்ளன.
இதையெல்லாம் தாண்டி, அடிப்படை வசதிகள் இல்லாத 9 பொறியியல் கல்லூரிகளை சேர்க்கைக் கிடையாது என்ற பட்டியலில் ஏஐசிடிஇ வைத்துள்ளது. இதனால், தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் மேலும் ஒரு 2,542 இடங்களைக் குறைந்துள்ளது.
இதே போல, 2 மேலாண்மை கல்வி நிறுவனங்களும், 9 எம்சிஏ கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கைக் கிடையாது என்ற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கல்வியாண்டில் வெறும் 2 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே புதிதாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம் 258 மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஏற்கனவே இருக்கும் 42 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்த்தப்பட்டதால் 4,145 இடங்கள் அதிகரித்துள்ளன.
மேலும், 3 எம்பிஏ கல்வி நிறுவனங்களும், 4 எம்சிஏ கல்வி நிறுவனங்களும் இந்த கல்வியாண்டில் இருந்து புதிதாக செயல்பட அனுமதி பெற்றுள்ளன.
தேசிய அளவில், 23,930 இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை அளித்து வந்த 83 கல்வி நிறுவனங்களை மூடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதே போல, 53 கல்வி மையங்களும் தங்களது கல்விச் சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளன. 755 கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர் சேர்க்கையை குறைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளன. மேலும் 87 பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்காக இதுவரை அனுமதி கோரவில்லை. இந்த வகையில், இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் சுமார் 1 லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் குறைந்துவிடும் என்று தெரிய வந்துள்ளது.
பொறியியல் கல்விக்கு ஏற்பட்ட பெரும் மவுசு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் உட்பட இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல அதிகரித்தன. ஒரு பக்கம் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏராளமான பொறியாளர்களை உருவாக்கினாலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வழி ஏற்படாமல் போனதால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
பொறியியல் படித்துவிட்டு சாதாரண வேலை கூட கிடைக்காமல் அவதிப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தாலும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் பொறியியல் கல்லூரியைத் தொடங்கி, மாணவ, மாணவிகளுக்கு போதிய கல்வியறிவைக் கொடுக்க முடியாத கல்லூரிகளும், பொறியியல் படிப்புக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தக் காரணங்களாகின.
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து, வீதிக்கு வீதி தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.
அடிப்படை வசதிகள், பொறியியல் கல்லூரிக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு, சிறந்த மாணவ, மாணவிகளை பொறியாளர்களாக உருவாக்கி வரும் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த போட்டியில் நீடித்து நிலைக்க முடிந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!