என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

என்.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், முதல் 2 இடங்களை ஆந்திர மாணவர்கள் கைப்பற்றி உள்ளனர்.

Result: Click Here

தேசிய அளவில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.) மெயின் என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த மதிப்பெண் மூலம் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் மத்திய அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேரலாம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் என்ற தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி.யில் சேரலாம். அதன்படி, வருகிற கல்வி ஆண்டில் (2018-2019-ம் வருடம்) என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு, 112 நகரங்களில் 1,621 மையங்களில் நடைபெற்றது.

10 லட்சத்து 74 ஆயிரத்து 319 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை எழுத்து (ஆப் லைன்) தேர்வு மூலம் 8 லட்சத்து 57 ஆயிரத்து 564 பேர் எழுதினார்கள். கம்ப்யூட்டர் (ஆன்லைன் ) மூலம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 755 பேர் எழுதினார்கள்.

இந்த தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. நேற்று வெளியிட்டது. 2 லட்சத்து 31 ஆயிரத்து 24 பேர் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு எழுத தகுதி பெற்றிருக்கிறார்கள். அவர்களில், மாணவர்கள் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 331 பேர். மாணவிகள், 50 ஆயிரத்து 693 பேர்.

ஆந்திர மாநிலம் விஜய வாடாவை சேர்ந்த மாணவர் போகி சூரஜ் கிருஷ்ணா, முதலிடத்தை பிடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த ஹேமந்த் குமார் சோடிபில்லி இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

சென்னையை சேர்ந்த மாணவர் அனீஸ்வர் ஸ்ரீவத்சலா கிருஷ்ணன் அகில இந்திய அளவில் 21-வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணன் எடுத்த மதிப்பெண்கள் 335 ஆகும். அவருடைய தந்தை ராமலிங்கம், தாயார் உமா ஆகும். கிருஷ்ணன் கூறும்போது, ‘எலக்ட்ரிக்கல் பாடம் எடுத்து படிக்கவேண்டும் என்பது என் ஆசை’ என்றார்.

இதேபோல சென்னையை சேர்ந்த ரகுராமன் 27-வது இடம் பிடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 335 ஆகும். ரகுராமன் தந்தை ரவி, தாயார் ரமா.

தேர்ச்சி பெற்றவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 275 பேர் பொதுப்பிரிவினர். அவர் களுக்கு கட் ஆப் மதிப்பெண் 74 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்பட்டோர் பிரிவினர் 65 ஆயிரத்து 313 பேர் ஆவர். இவர்களுக்கு 45 கட் ஆப் மதிப்பெண். ஆதிதிராவிடர் பிரிவினர் 34 ஆயிரத்து 425 பேர். அவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் 29 ஆகும். பழங்குடி பிரிவினர் 17 ஆயிரத்து 256 பேர். அவர்களுக்கு 24 கட் ஆப் ஆகும். இவர்கள் தவிர மற்றவர்களும் உள்ளனர்.