நீட் தேர்வு நிறைவு: தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் பங்கேற்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இந்தத் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் 2,255 மையங்களில் மற்றும் தமிழகத்தில் 170 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமையப் பெற்றுள்ளன.
தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தாஸ், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு எழுதினர். வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மின்னணு பொருட்கள், ஷூ முழுக்கை சட்டை, டி - சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, நகைகள், புடவை, பர்தா, தொப்பி, பைஜாமா குர்தா உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அரைக்கை சட்டை, செருப்பு, கால்சட்டை, ஜீன்ஸ் கால்சட்டை, மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திருமணமான பெண்கள் தாலி, வளையல் அணியலாம்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் தேர்வு அறைக்குள் சென்றவுடன் வருகைப் பதிவுக்கான தாளில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே மாணவர்கள் எடுத்துச் சென்றனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்பட்டது.
மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.