CBSE கேள்வித்தாளை வெளியிட்ட ஆசிரியர்கள் கைது

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 3 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தான் பிளஸ் 2 பொருளியல் தேர்வு கேள்வித்தாளை வெளியிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் வெளியானது. இதனையடுத்து இரண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 9 சிறுவர்கள் உட்பட 12 பேரை கைதுசெய்துள்ளனர். இதனிடையே, கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சிபிஎஸ்இ அமைப்பை எச்சரித்த நபரை போலீசார் கண்டறிந்துள்ளனர். இமெயில் மூலம் தகவல் தெரிவித்தது 10ம் வகுப்பு மாணவர் என்பதை கண்டறிந்துள்ள போலீசார், அவரை பற்றி தகவலை வெளியிடவில்லை. 

இந்நிலையில், கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தேர்வு பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் அதில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில் கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் ரிஷாப் மற்றும் ரோஹித் ஆகியோர், தேர்வு நடந்த மார்ச் 26 தேதி காலை 8.15 மணிக்கு பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாளின் பதிலை நிரப்பினர்.தொடர்ந்து அதனை தங்களது மொபைலில் படம்பிடித்து பயிற்சி மைய உரிமையாளர் டோகீருக்கு அனுப்பி வைத்தனர். இதனை அவர் தேர்வு துவங்கும் அரைமணி நேரத்திற்கு முன்னர் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார். கேள்வித்தாள் கையால் எழுதப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.