தங்கம் வென்றார் தமிழர் பளுதூக்கும் போட்டியில் சதீஷ் சாதனை

 தங்கம், வென்றார் ,தமிழர், பளுதூக்கும் ,போட்டியில், சதீஷ் சாதனை

கோல்டு கோஸ்ட்:காமன்வெல்த் விளையாட்டு, பளுதுாக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த, சதீஷ்குமார் சிவலிங்கம், தங்கம் வென்று சாதனை படைத்தார்.


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், 21வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. இதில், ஆண்களுக்கான பளுதுாக்குதல், 77 கி.கி., பிரிவில், தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் பங்கேற்றார்.இவருக்கும், இங்கிலாந்தின் ஜாக் ஆலிவருக்கும் இடையே போட்டி நிலவியது. 'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில், 144 கி.கி., எடை துாக்கினார் சதீஷ்.அடுத்து, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில், முதல் வாய்ப்பில், ஆலிவர்,167 கி.கி., எடை துாக்கினார். மற்ற இரண்டு வாய்ப்பையும் நழுவவிட்டார்.


அதே நேரம், சதீஷ் அதிகபட்சமாக இரண்டாவது வாய்ப்பில், 173 கி.கி., எடை துாக்கி தங்கத்தை உறுதி செய்தார். சதீஷ் ஒட்டுமொத்தமாக (144 + 173 கி.கி.,) 317 கி.கி., எடை துாக்கி தங்கத்தை வசப்படுத்தினார்.


காமன்வெல்த் அரங்கில் அடுத்தடுத்து தங்கம் 
வென்று அசத்தி உள்ளார். ஏற்கனவே, 2014ல் கிளாஸ்கோவில் நடந்த விளையாட்டிலும் தங்கம் கைப்பற்றி இருந்தார்.இதன் மூலம், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சதீஷ்குமார் கூறுகையில், ''சமீபத்தில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றபோது, தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.''பளுதுாக்கும் போது உடலில் வலியும் அதிகமாக இருந்தது. இருப்பினும், பயிற்சியாளர் குழுவினர் ஊக்கம் தந்தனர். இது, தங்கம் வெல்ல உதவியாக அமைந்தது.
''இங்கிலாந்தின் ஆலிவர்,'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் தரப்பட்ட இரண்டு வாய்ப்பிலும் ஏமாற்றினார். இது, எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது.''கடந்த முறை (கிளாஸ்கோ, 2014) மொத்தம், 328 கி.கி., துாக்கி தங்கம் வென்றேன். இம்முறை, காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அந்த அளவுக்கு எடையை துாக்க முடியவில்லை,'' என்றார்.


ரூ.50 லட்சம் பரிசு
காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, வாழ்த்து தெரிவித்து, 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி,பிரதமர்வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,' காமன்வெல்த் விளையாட்டில், இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்கள் தொடர்ந்து பெருமை தேடித்தருகின்றனர். மூன்றாவது நாளில் தங்கம் வென்றுள்ள பளுதுாக்குதல் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு பாராட்டுகள்' என, தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், 'காமன்வெல்த் விளையாட்டு அரங்கில், அடுத்தடுத்து தங்கம் வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ள சதீஷ் சிவலிங்கத்திற்கு வாழ்த்துகள்' என, தெரிவித்துள்ளார்.