சென்னை கலைவாணர் அரங்கில் 'தினமலர் வழிகாட்டி' இன்று நிறைவு : மாணவர்கள் பயன்பெற கடைசி வாய்ப்பு

பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான ஆலோசனைகளை அள்ளித்தரும், 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, இன்று நிறைவடைகிறது.'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று முன்தினம், 'வழிகாட்டி' நிகழ்ச்சியை துவக்கின. பிளஸ் 2 தேர்வு எழுதிஉள்ள மாணவர்கள், உயர்கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம் என்பது குறித்த, ஆலோசனைகளை அள்ளித்தரும், இந்த நிகழ்ச்சிக்கு, கலசலிங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக உள்ளன.


அரங்குகள் : இதில், பிளஸ் 2வுக்கு பின் படிக்க வாய்ப்புள்ள, உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு, ஒரே இடத்தில் தெளிவு பெறும் வகையில், 100க்கும் மேற்பட்ட, உயர்கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில், கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், சேருவதற்கான தகுதி, படிப்புக்கான செலவுகள் போன்றவை குறித்து, கல்லுாரி பிரதிநிதிகள் விளக்கம் அளிப்பதால், பெற்றோர், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய, தெளிவான சிந்தனையுடன் செல்கின்றனர். மேலும், கலை, அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரையிலான சந்தேகங்களுக்கும், கல்வியாளர்கள் இரண்டு நாட்களாக விளக்கம் அளித்துள்ளனர்.நேற்றைய நிகழ்ச்சியில், கேரியர் கவுன்சிலிங் குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி; கல்விக்கடன் குறித்து, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி, விருதாச்சலம்; அரசு வேலைவாய்ப்புகள் குறித்து, காவல் துறை துணை கண்காணிப்பாளர் வினோத் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
கடிகாரம் பரிசு : நேற்றைய குழு விவாதத்தில், மானுடவியல் துறை குறித்து, மாறன்; புதிய கலைப்படிப்புகள் குறித்து, திருமகன்; மீடியா, அனிமேஷன், கிராபிக் டிசைனிங் துறைகள் குறித்து, திருநாவுக்கரசு; மொழியியல் மற்றும் இலக்கியம் குறித்து, அருணாச்சலம்; வணிகவியல் மற்றும் பொருளியல் குறித்து செல்வசுந்தரம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.வழிகாட்டி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் பங்கேற்கும், 'பேனல் டிஸ்கஷன்' என்ற, குழு ஆலோசனை நடத்தப்படுவதால், மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நிகழ்ச்சியில் கேட்கப்படும், பொது அறிவு வினாக்களுக்கு, சிறந்த பதில் அளிக்கும் முதல் மாணவருக்கு, 'டேப்லெட்' மற்றும் அடுத்தடுத்த இடம் பெறும் ஐந்து மாணவர்களுக்கு, கைக்கடிகாரங்களும் பரிசாக வழங்கப்படுகின்றன.நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், சிறந்த கல்லுாரிகள், பல்கலைகளில் உள்ள, பாடப்பிரிவுகள், அவற்றால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என, அனைத்து தகவல்களும் அடங்கிய, 'வழிகாட்டி' தகவல் புத்தகமும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயனுள்ள வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று நிறைவடைகிறது. இன்றைய நிகழ்வுகள் என்ன?இன்றைய, 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், காலையில், சிவில் சர்வீசஸ் தேர்வுகள் குறித்து, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி, நந்தகுமார்; சட்டப்படிப்புகள் குறித்து சத்தியகுமார்; மேலாண்மை படிப்புகள் பற்றி தில்லைராஜன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மாலையில், புதிய அறிவியல் படிப்புகள் குறித்து, பாலசாண்டில்யன்; சைபர் குற்றங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து, கிருபா சங்கர்; அறிவியல் துறை குறித்து, லட்சுமி; 'ஹெல்த் சயின்ஸ்' குறித்து, கிருஷ்ணன்; உடற்கல்வி, யோகா, விளையாட்டு துறைகள் குறித்து, ராதாகிருஷ்ணன் ஆகியோர், விளக்கம் தர உள்ளனர்.