கார்களுக்கு பதிவு எண்கள் மத்திய அரசு புது உத்தரவு

நாடு முழுவதும், இனி கார் வாங்கும்போது, அதற்கான பதிவு எண்களை, கார் தயாரிப்பு
நிறுவனங்களே பெற்று தரும் என்றும், அதற்கான தொகை, காரின் விலையுடன் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


'நாடு முழுவதும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்தாண்டு ஜூலை, 1ம் தேதிக்கு பின் தயாரிக்கும் அனைத்து கார்களிலும், டிரைவருக்கு, 'ஏர் பேக்' வசதி, 'சீட் பெல்ட்' அணிய நினைவூட்டும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

'அத்துடன், வேக கட்டுப்பாட்டு எச்சரிக்கை கருவி ஆகியவை கட்டாயமாக பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்' என, தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கார்களுக்கு பதிவு எண் வழங்குவதில் புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி கூறியதாவது:

கார்களுக்கான பதிவு எண்கள், மாவட்ட வாரியாக உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பதிவு எண் பெற, 800ல் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த பதிவு எண் பலகையை, ஒவ்வொரு மாநிலமும், தனித்தனியாக, சில குறிப்பிட்ட நிறுவனங்களிடம் வாங்கி வருகின்றன.


இனி கார் தயாரிப்பு நிறுவனங்களே பதிவு எண்களைப் பெற்று, அவற்றை காரில் பொருத்தி, விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான தொகை, காரின் விலையுடன் சேர்க்கப்படும்; இது, வாடிக்கையாளருக்கு நிம்மதி அளிப்பதுடன், பதிவு எண் பலகை விஷயத்தில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றவும் உதவியாக இருக்கும். தற்போது இருப்பதைப் போலவே, வாகனங்களின் பாதுகாப்பில் எந்த குறைகளும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.