ஊதிய முரண்பாடு ஒரு நபர் கமிட்டி : அரசாணை திருத்தம்

ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.



'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். எனவே, கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்கான அரசாணையில், 'ஊதிய முரண்பாடுகளுடன், சிறப்பு ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான மனுக்களையும், ஒரு நபர் கமிட்டி பரிசீலிக்கும்' என, திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.