சி.பி.எஸ்.இ., தேர்வுகள் துவக்கம்

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு பொதுத் தேர்வுகள், நேற்று துவங்கின. இதில், பிளஸ் 2வில், 11.86 லட்சம் பேர் பங்கேற்றனர்; 10ம் வகுப்பில், விருப்பப் பாட தேர்வு என்பதால், குறைந்த அளவு மாணவர்களே தேர்வில் பங்கேற்றனர். பிளஸ் 2வில், முதல் நாளான நேற்று,
ஆங்கில பாடத்துக்கு தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 'மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் எழுதவும், கட்டுரைகள் எழுதவும், நீண்ட நேரம் தேவைப்பட்டது. 'வினாத்தாள் எளிதாக இருப்பதை புரிந்து, பதற்றமின்றி எழுதி இருந்தால், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறலாம்' என, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இன்று, விருப்பப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. நாளை, இயற்பியல், கிளினிக்கல் பயோகெமிஸ்ட்ரி, முதன்மை சுகாதார பணி உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.பத்தாம் வகுப்பில், விருப்பப் பாடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. இதில், தகவல் தொழில்நுட்பம், சில்லரை வர்த்தகம், பாதுகாப்பு, ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், அழகு கலை, உணவு தயாரிப்பு தொழில்நுட்பம், அலுவலக நிர்வாகம், வங்கியியல் போன்ற பாடங்களில், மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. இன்று, ஹிந்தி பாடத்திற்கு தேர்வு நடக்கிறது.