பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார் தாலுகா, பெரிய கொளுத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், மோகன்; இவரது மகன், கீர்த்தீஸ்வரன். அப்பகுதியில் உள்ள பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தான்.நேற்று முன்தினம், பள்ளி கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த, கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான். 


இதை அறிந்த முதல்வர், இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்படவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்லுாரி கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவன் கீர்த்தீஸ்வரன் இறந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.