குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 11-இல் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை சார்பில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 11-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 தேர்வும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவுள்ளன. இந்த போட்டித் தேர்வுகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட தேர்வர்கள் தயாராகும் பொருட்டு, மாவட்டக் கல்வித் துறை சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது.
தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் 18 வயது நிரம்பிய போட்டித் தேர்வர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். வணிக வரித் துறை உதவி ஆணையர் மணிமொழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். மேலும் விவரங்களுக்கு 88380 19287 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.