'நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




புதிய விதிகள் வருமாறு:

பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்
  • இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன