பள்ளி தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து பிளஸ்-1 மாணவன் வெறிச்செயல்

வகுப்புக்கு செல்லாததை கண்டித்த தலைமை ஆசிரியரை 
பிளஸ்-1 மாணவன் கத்தியால் குத்தி வெறிச்செயலில் 
ஈடுபட்டான். தப்பி ஓடிய அவனை போலீசார் கைது 
செய்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரெயில் நிலைய 
சாலையில் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி 
செயல்பட்டு வருகிறது. அரசு நிதியுதவி பெறும் 
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பாபு (வயது 52) 
பணியாற்றி வருகிறார்.

பள்ளி நேற்று காலை வழக்கம்போல் தொடங்கியது. 
ஆனால் சில மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் 
பள்ளியின் மேல்தளத்தில் காலியாக இருந்த 
வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். அதே நேரத்தில் 
தலைமை ஆசிரியர் வகுப்பறைகளை பார்வையிட்டவாறு 
வந்தார்.

காலியாக இருந்த வகுப்பறைக்குள் சில மாணவர்கள் 
தனியாக இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 
உடனே அவர்களை கண்டித்து ஒவ்வொரு மாணவராக 
வகுப்பறைக்கு அனுப்பிவைத்தார்.

கடைசியாக பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவனிடம் வந்து 
விசாரித்து கொண்டிருந்தார். திடீரென அந்த மாணவன்
 தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் 
தலைமை ஆசிரியர் பாபுவை வயிறு, முகத்தில் 
சரமாரியாக குத்தினான்.

இதில் அவர் வயிற்றை பிடித்தவாறே அலறியவாறு 
ரத்தம் சொட்டச்சொட்ட கீழே விழுந்தார். அவரது 
சத்தத்தை கேட்டதும் அருகில் உள்ள அறைகளில் 
இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு ஓடி வந்தனர். 
அவர்கள் துடிதுடித்துக்கொண்டிருந்த தலைமை 
ஆசிரியரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு
 அழைத்து சென்றனர். பின்னர் வேலூரில் உள்ள தனியார் 
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன் தப்பி 
ஓடிவிட்டான். தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார்
 மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து 
வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக 
போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 
மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 
அவன் போலீசில் சரண் அடைந்தான். பின்னர் அவனை 
போலீசார் கைது செய்தனர்..

தலைமை ஆசிரியர் பாபு கடந்த ஆண்டு பள்ளிக்கு 
மோட்டார் சைக்கிளில் வந்த போது ஒரு மாணவன் 
அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினான். இதில் 
அவர் அலறியபடி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே 
விழுந்து காயம் அடைந்தார். இந்நிலையில் 2-வது 
முறையாக இப்போது அவர் கத்தியால் 
குத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.