வீணாகும் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி - அமைச்சர்கள் பெயரில் 'கூத்து' : கைகள் கட்டப்படுவதாக தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு- DINAMALAR

மதுரை: தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் மூலம் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு நிதி, அமைச்சர்கள் பெயரால் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.


ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் மூலம் 5,800க்கும் மேற்பட்ட அரசு உயர், மேல்நிலை, ஆதிதிராவிடர், கள்ளர், மாநகராட்சி பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகின்றன.இதில், 17500 ரூபாய் பள்ளி செலவினங்களுக்கும், 7500 ரூபாய் நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கும், 25 ஆயிரம் ரூபாய் அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கவும் ஒதுக்கப்படுகின்றன. இதில் புத்தகங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் அரங் கேறுவதாக ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சை ஏற்
படுகிறது.

நடப்பு கல்வியாண்டிற்கான இந்நிதி தற்போது மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு பள்ளிகளுக்கு பொருட்கள் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமைச்சர்களின் பெயரை கூறி... : பல மாவட்டங்களில் அமைச்சர்கள் பெயர்களை கூறி முதன்மை கல்வி அலுவலர்களை (சி.இ.ஓ.,க்கள்) சந்திக்கும் சில தனியார் நிறுவனத்தினர், 'அமைச்சர் கூறியுள்ளார். ஆய்வக உபகரணங்களை நாங்கள் சப்ளை செய்கிறோம். பள்ளி விவரங்களை தாருங்கள்,' எனக்கூறி பொருட்களை வழங்க தயார் நிலையில் உள்ளனர். 


சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பள்ளி ஆய்வகங்களில் ஏற்கனவே உள்ள பொருட்களையே தான் வழங்குகின்றன. அவற்றின் மொத்த மதிப்பு 5 ஆயிரம் ரூபாய் கூட இருக்காது. தேவைப்படும் பொருட்களை வாங்க எங்களால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியவில்லை. எங்கள் கைகள் கட்டப்பட்டு விடுகின்றன,' என தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த சர்ச்சை எழுகிறது. இந்தாண்டு, 'அமைச்சர் பெயரை கூறி எந்த கம்பெனிகள் வந்தாலும் தலைமையாசிரியர்கள் சம்மதிக்க வேண்டாம். 


ஆய்வகத்திற்கு தேவைப்படும் பொருட்களை சுதந்திரமாக வாங்குங்கள்,' என திட்ட உயர் அதிகாரியாக இருந்தவர் டிசம்பரில் கூறினார். ஆனால் சில நாட்களுக்கு முன் அவர் மாற்றம் செய்யப்பட்டார்.இந்தாண்டும் அதிகாரிகள், "அமைச்சர் கூறியிருக்கார். உங்கள்பள்ளிக்கு தேவையான ஆய்வக உபகரணங்கள் லிஸ்ட்டை கொடுங்கள்," என கேட்டு பெற்றுள்ளனர். ஆய்வகங்களுக்கு பிப்பெட், பியூரெட், கண்ணாடி குடுவைகள், சால்ட், அமிலங்கள் என வழங்கிய பொருட்களையே மீண்டும் வழங்குகின்றனர். பல பள்ளிகளில் இப்பொருட்களை பயன்படுத்தாமல் சாக்கு மூட்டைகளில் கட்டி போட்டுள்ளனர். அதே பொருட்களை மீண்டும் வழங்க உள்ளனர்.


தற்போது பிளஸ் 1 பொதுத் தேர்வாக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2விற்கு பயன்படும் வகையில் ஆய்வக பொருட்கள் வாங்க நினைக்கிறோம். அதிகாரிகள் கட்டாயத்தால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதுதவிர நுாலகத்திற்கு 7500 ரூபாய்க்கு புத்தகங்கள் வழங்குகின்றனர். அதில் தேவையில்லாத புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள் நலனிற்காக ஒதுக்கப்படும் இதுபோன்ற நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என மத்திய அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றனர்.