தனியார் பஸ்களில் செல்லும் மாணவியருக்கு பயம் தரும் பயணம்! அத்துமீறும் கண்டக்டர், டிரைவர்கள்

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாநகர் உயர் கல்வி மையமாகத் திகழ்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த பள்ளி, கல்லுாரிகள் அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், இங்கு வந்து படித்து வருகின்றனர். குழந்தைகளின் கல்விக்காகவே, கோவையில் வந்து குடியேறுவோரின் எண்ணிக்கையும், ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகி வருகிறது.

மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப மக்கள் போக்குவரத்து வசதிகள் இங்கு இல்லை. அதனால், அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களை மட்டுமே, பெரும்பாலான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நம்பியுள்ளனர். குறைந்தபட்சம், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களையும், பெண்களுக்கு தனி பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசால் ஏற்கப்படவில்லை.

பஸ் பாஸ், 'வேஸ்ட்'
வசதி படைத்தோர், தங்களது குழந்தைகளை வாகனங்களில் அனுப்பி விடுகின்றனர். ஆனால், நடுத்தர மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு அல்லது தனியார் பஸ்களில் தான், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வருகின்றனர்.

இலவச 'பாஸ்' வைத்துள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அரசு பஸ்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.இந்த காரணத்தால், தனியார் பஸ்களில் மாணவர்கள் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களில், 16 முதல் 20 வயதுள்ள மாணவிகளை குறிவைத்து, தனியார் பஸ்களில் பணியாற்றும் இளம் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் நடத்தும் காதல் லீலைகள் தான் பெற்றோருக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

மாநகர பகுதியில் பள்ளி, கல்லுாரிகள் அதிகளவுள்ள அவிநாசி ரோடு, திருச்சி ரோடு போன்ற வழித்தடங்களில் உள்ள பஸ்களில் தான் இதுபோன்ற அத்துமீறல்கள் அதிகளவு நடக்கிறது. இந்த வழித்தடங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவியர், தங்களின் வீடுகளில் இருந்து வழக்கமாக குறிப்பிட்ட சில பஸ்களில் மட்டுமே செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மாணவியரைக் குறிவைத்து, காதல், நட்பு என்ற பெயரில் அத்துமீறுவது, அதிகரித்து வருகிறது.

இதனால், ஏராளமான மாணவியரின் வாழ்க்கை, சீரழிக்கப்பட்டுள்ளது. படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை, பெருகி வருகிறது. குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வருவதால், தனியார் பஸ்களில் 25 வயதுக்குட்பட்ட நபர்களை தான், 90 சதவீதம் கண்டக்டர், டிரைவர்களாக உரிமையாளர்கள் நியமித்துள்ளனர். இவர்களே இத்தகைய காதல் விளையாட்டுக்களை அரங்கேற்றி வருகின்றனர்.

நெரிசலுக்கு இடையில்...இது ஒரு புறமிருக்க, இவர்களுடைய காதல் வலையில் விழ மறுக்கும் மாணவியர் மற்றும் இளம் பெண்களை, கூட்ட நெரிசல் என்ற பெயரில் உரசுவது, அநாகரிகமாக நடந்து கொள்வது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் இதுபோன்ற கண்டக்டர்கள், பொதுமக்கள் கைகளில் சிக்கி நன்கு 'கவனித்த' சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனாலும், இவர்களின் சேட்டைகள் குறைந்தபாடில்லை.

இந்த பஸ்களில், பெண்கள் மட்டுமே முன்னால் ஏற வேண்டுமென்றுகட்டாயப்படுத்தும் கண்டக்டர்கள், கடைசி படிக்கட்டு வரையிலும் மாணவியர் உள்ளிட்ட பெண்களை ஏற்றி விட்டு, அதற்குப் பின், அவர்கள் தொங்கிக் கொண்டும், இடித்துக் கொண்டும் வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் கூறுகையில், 'பல தனியார் பஸ்களில், கண்டக்டராகவே வேலை பார்க்காத பல இளைஞர்கள், கண்டக்டர் போல, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு, பெண்களிடம் அருவருப்பாக நடந்துகொள்கின்றனர். 

இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ் உரிமையாளர்களும், கல்லுாரி மாணவியர் பயணிக்கும் பஸ்களில் நடுத்தர வயதினரைப் பணியில் அமர்த்த வேண்டும்' என்றனர்.களமிறங்குவாரா போலீஸ் கமிஷனர்?தனியார் பஸ்களில் பல கண்டக்டர்களுக்கு அதற்கான 'லைசென்ஸ்' இருப்பதே இல்லை. ஒரு பஸ்சில் நான்கு, ஐந்து பேர் கண்டக்டர்கள் என்ற பெயரில் வலம் வருகின்றனர். இதுபோன்ற நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாணவியரும் பெற்றோருக்கு தெரிவிப்பதில்லை. மாணவியரிடம் உளவுத்துறையினர் விசாரித்தால், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கலாம். மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது போலீசாரின் பொறுப்பு. போலீஸ் கமிஷனர் களம் இறங்கி, இவர்களை, 'கவனித்தால்', இந்த அத்துமீறல் முடிவுக்கு வரலாம்.