மதுரையில் மாவட்ட ஓய்வூதிய அலுவலகம் அமையுமா? ஓராண்டாக கிடப்பில் திட்ட பரிந்துரை

மதுரை மாவட்ட ஓய்வூதியர்களின் நலனை கருத்திற் கொண்டு ஓய்வூதிய அலுவலகத்தை விரைந்து திறக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்த திட்ட பரிந்துரைஓராண்டிற்கும் மேலாக நிதித்துறையில் கிடப்பில் உள்ளது. 

இம்மாவட்டத்தில் மாவட்ட கருவூலம், ஆறு சார்நிலை கருவூலங்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் உட்பட இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் 42 ஆயிரம் பேர் மாவட்டத்தில் வசிக்கின்றனர். இவர்கள் ஓய்வூதியம் தொடர்பான பிரச்னைகளுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட கருவூலத்திற்கு செல்கின்றனர். அங்கு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பளம், பணப்பயன்கள் குறித்த பணிகள் நடப்பதால் ஓய்வூதிய பலன்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.சென்னை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். 

அங்கு ஓய்வூதியர்களுக்காக மாவட்ட ஓய்வூதிய அலுவலகம் செயல்படுகிறது. அதுபோல மதுரையில் அமைக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர்கள் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: இதுகுறித்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் மதுரையில் அமைக்க ஒப்புதல் வழங்கி விட்டார். இதுகுறித்த திட்ட பரிந்துரை நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு ஓராண்டாக கிடப்பில் உள்ளது. இந்த அலுவலகம் அமைந்தால் ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். கருவூலத்துறையில் கூடுதல் ஊழியர்களும் நியமிக்கப்படுவர், என்றார்.