பரிசீலனை!

பெண் அதிகாரியை தேர்தல் ஆணையராக்க மத்திய அரசு...
தென் மாநிலத்தை சேர்ந்தவருக்கு கிடைக்கிறது வாய்ப்பு
மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார் தலைமை கமிஷனர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர், அச்சல் குமார் ஜோதி, இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுவதை அடுத்து, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் ஆணைய குழுவில்,ஒரு இடம் காலியாகிறது. இந்த இடத்துக்கு, கேரளாவைச் சேர்ந்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அருணா சுந்தரராஜனை நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெண் அதிகாரியை தேர்தல் ஆணையராக்க மத்திய அரசு... பரிசீலனை!

நாட்டில் நடக்கும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்கள், லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்படுகின்றன. இது தவிர, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

தேர்தல் நடத்துவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பது, அதை மீறும் வேட்பாளர்கள் மீதான புகார்களை விசாரிப்பது, கட்சி அங்கீகாரம், அதற்கான சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.

பொறுப்பேற்றார்

தேர்தல் ஆணைய குழுவில், மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இடம் பெறுவர். மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இந்த பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில், ஒருவர், தலைமை தேர்தல் ஆணையராகவும், மற்ற இருவர், தேர்தல் ஆணையர்களாகவும் செயல்படுவர்.தற்போது, தலைமை தேர்தல் ஆணையராக உள்ள, அச்சல் குமார் ஜோதி, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.
குஜராத் கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், கடந்த ஜூலை, 6ல், நாட்டின், 21வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
தற்போதைய சட்ட விதிகளின்படி, தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நபர், ஆறு ஆண்டுகள் அல்லது, 65 வயது நிறைவடையும் வரை, அந்த பதவியில் நீடிக்கலாம். இம்மாதத்துடன், அச்சல் குமார் ஜோதிக்கு, 65 வயது நிறைவடைவதை அடுத்து, அவர், தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, தற்போது தேர்தல் ஆணையர்களாக உள்ள, ஓம் பிரகாஷ் ராவத் அல்லது சுனில் அரோரா ஆகியோரில் ஒருவர், புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவர்.மூன்று உறுப்பினர் அடங்கிய தேர்தல் ஆணைய குழுவில், ஒரு இடம் காலியாவதை அடுத்து, அந்த இடத்தை நிரப்ப, புதிதாக ஒருவரை, தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும்.

இதுவரை, பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே, தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அருணா சுந்தரராஜனின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட அனுபவம் கேரளா கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அருணா சுந்தரராஜன், மத்திய தொலைதொடர்பு துறை செயலராகவும், தொலை தொடர்பு ஆணைய தலைவராகவும் உள்ளார்.மத்திய அரசு பணிகளில், நீண்ட அனுபவம் மட்டுமின்றி, தென் மாநிலத்தைச் சேர்ந்த, பெண் அதிகாரி என்பதால், அருணா சுந்தரராஜனை, புதிய தேர்தல் ஆணையராக நியமிப்பதில், மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த அருணா?
கேரளா கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, அருணா சுந்தரராஜன், 1982ல், ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்து, அந்த மாநிலத்தில் பணியை துவங்கினார். மாநில தொழில்நுட்ப துறை
செயலராக பதவி வகித்த அவர், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தோரும், தொழில்நுட்ப அறிவு பெறும் வகையிலான, பல திட்டங்களை அமல்படுத்தினார். இவரின் சாதனைகளை பாராட்டி, பிரபல பத்திரிகை நிறுவனங்கள், இவருக்கு பல விருதுகளை வழங்கியுள்ளன. மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான அரசின் நம்பகத்தன்மை வாய்ந்த, மூத்த அனுபவமிக்க அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
தென் மாநிலங்களை சேர்ந்தோர்!
இந்திய தேர்தல் ஆணையர்களாக பணியாற்றிய, தென் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள்: கல்யாண் சுந்தரம், டி.சுவாமிநாதன், ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரி, ரமா தேவி ,டி.என்.சேஷன், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்.கோபால்சாமி வி.எஸ்.சம்பத்


16 நாள் அதிகாரி!

இதுவரை தேர்தல் ஆணையர்களாக, பெரும்பாலும், ஆண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். 1990 நவ., 26 முதல் அதே ஆண்டு, டிச., 11 வரை, வெறும், 16 நாட்களுக்கு மட்டும், மூத்த பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, ரமா தேவி, தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிஉள்ளார். அதற்கு பின், ஒரு பெண் அதிகாரி கூட, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படவில்லை.