2017-ஆம் ஆண்டின் தேசியம்

ஜனவரி
2 தேர்தலின்போது ஜாதி, மத ரீதியாக வாக்குகள் சேகரிப்பது முறைகேடான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டது.

2 ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் உணவருந்தும் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
3 "ரோஸ்வேலி' நிதி நிறுவன முறைகேடு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
4 உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்றார். கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார்.
10 ராணுவத்தினருக்கு தரமற்ற உணவு வழங்குவதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பிரதாப் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
15 முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
16 சமாஜவாதி கட்சியையும், சின்னத்தையும் அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இது அக்கட்சியின் நிறுவனரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங்குக்கு பின்னடைவாக அமைந்தது.
17 உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்த இரு வேறு ரயில் விபத்துகளில் 151 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி இருந்தது கண்டறியப்பட்டது.
18 சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார்.
21 ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 39 பேர் பலியாகினர்; 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
26 காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நேர்ந்த பனிச்சரிவில் சிக்கி பாதுகாப்புப் படையினர் 20 பேர் பலியாகினர்.
பிப்ரவரி
2 ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார முறைகேடு வழக்கில் மாறன் சகோதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக நாடு முழுவதும் 156 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
6 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விருதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
13 மத்தியப் பிரதேசத் தேர்வு வாரியமான வியாபம் சார்பில் முறைகேடாக நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும், மாணவர் சேர்க்கையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
13 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரத்திலும் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை நடத்துவதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
15 ஒரே செயற்கைக்கோளில் 104 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இந்தியா. இஸ்ரோ வரலாற்றின் புதிய மைல் கல் சாதனையாக இது பதிவானது.
17 பிரபல தென்னிந்திய நடிகை பாவனா, தம்மை சிலர் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகப் புகார் அளித்தார். இதில் மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
19 உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்த விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்த நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
23 மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகளை அக்கட்சி கைப்பற்றியது.
24 ரூ.17,000 கோடி செலவில் அதிநவீன ஏவுகணையை ஒருங்கிணைந்து வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா - இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டது.
மார்ச்
2 ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
6 போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஐஎன்எஸ் விராட் கப்பல், கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றது.
8 இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
9 பணிக்குச் செல்லும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
10 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாகக் கருதப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், இன்னமும் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
11 சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தாக்குதலில் 11 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.
11 உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. கோவா மற்றும் மணிப்பூரில் பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியமைத்தது பாஜக.
15 பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரும், சமாஜவாதி மூத்த தலைவருமான காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டார்.
15 பீரேன் சிங் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார்.
16 பஞ்சாப் முதல்வரானார் அமரீந்தர் சிங்.
18 பாஜகவின் திரிவேந்திர சிங் ராவத் உத்தரகண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.
19 உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்பு.
22 ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பிளவுபட்டதால் கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம்.
23 ஏர் இந்தியா ஊழியரை சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் காலணியால் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானத்தில் பயணிக்க அவருக்கு அனைத்து விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
27 அரசின் சமூக நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்ரல்

3 ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை.
3 வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் ஹிமாசல் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் ரூ.27 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்.
4 விவசாயிகள் பெற்ற ரூ.36,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்தது.
10 பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.
13 ஜம்மு - காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீநகர் இடைத் தேர்தலில் வெறும் 2 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகின.
17 நாரதா ரகசிய விடியோ வழக்கில் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த 12 மூத்த தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
18 கடன் ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை அந்நாட்டு போலீஸர் கைது செய்தனர். ஆனால், அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
19 விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் விதமாக கார்களில் சிவப்பு சுழல் விளக்குப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
24 தில்லி மாநகாராட்சித் தேர்தலில் 50 வார்டுகளைக் கூட கைப்பற்ற இயலாமல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது.
மே

5 வாராக் கடனை வசூலிக்க வங்கிகளுக்கு உத்தரவிடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு அதிகாரங்களை அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
5 நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளான 4 பேரின் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
7 தில்லியில் சுகாதாரத் துறை சத்யேந்திர ஜெயினிடம் இருந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு.
7 கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,900 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த 399 நிழல் நிறுவனங்களைக் கண்டுபிடித்தது சிபிஐ.
9 பாகிஸ்தானில் இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்.
9 தொழில் அதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
10 சிபிஎஸ்இ நடத்திய நீட் நுழைவுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிய தேர்வர்களுக்கு வெவ்வேறு வகையான கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டதாக எழுந்தப் புகாரால் சர்ச்சை.
12 சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய "நேஷனல் ஹெரால்டு' வழக்கில், வருமான வரித் துறை விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
16 மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை வங்க மொழி கட்டாயப் பாடமாக அறிவிப்பு.
22 மத்தியப் பிரதேசத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலர் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட மூவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனா வழங்கப்பட்டது.
26 அஸ்ஸம் மாநிலம், லோஹித் நதியின் குறுக்கே 9.15 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பபட்டுள்ள பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
26 நாடு முழுவதும் இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்ய தடை விதித்தது மத்திய அரசு.
30 பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் பதிவு.
ஜூன்
2 பிகாரில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த மாணவன் கைது.
3 பிரிவினையைத் தூண்டுவதற்கு பாகிஸ்தானில் இருந்து நிதி கிடைப்பதாக வந்த புகாரை அடுத்து, தில்லி, ஹரியாணா, காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை.
5 இந்தியாவால் உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட "ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-1' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
5 உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து தீப்பிடித்ததை அடுத்து 24 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
7 மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
8 கேரளத்தில் 3, 4 நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் மீண்டும் மது விற்பனைக்கு கேரள அரசு ஒப்புதல்.
10 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 1- முதல் ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவிப்பு.
13 லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்.
14 மேற்கு வங்க பள்ளிகளில் வங்க மொழியை எதிர்த்து, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டம்.
16 மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலேம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.
17 கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி.
20 நீதிபதி சி.எஸ்.கர்ணன், கோவை அருகே கைது.
23 ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து 39 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
27 ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஜூலை
1 நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது.
4 தலைமை தேர்தல் ஆணையராக ஏ.கே.ஜோதி நியமனம்.
7 லாலு பிரசாத், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 12 இடங்களில் சிபிஐ சோதனை.
7 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு கோரிய தமிழக அரசின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
10 ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.
18 நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறி மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் மாயாவதி.
20 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி
21 காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா விலகல்.
26 நிதீஷ் -லாலு கூட்டணி முறிவு; பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைக்க முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்.
31 சமையல் எரிவாயு மானியத்தை 2018-மார்ச்சில் இருந்து ரத்து செய்ய மத்திய அரசு முடிவு.
ஆகஸ்ட்
4 மரணச் சான்றிதழ் பெறவும் அக்டோபர் 1 முதல் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.
5 மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ராஜீவ் குமார் நியமனம்
9 பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆந்திரத்தில் சார் ஆட்சியராக பொறுப்பேற்பு.
11 நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு
பொறுப்பேற்பு.
11 உத்தரப் பிரேதசம், கோரக்பூர் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 22 குழந்தைகள் உள்பட 30 பேர் சாவு.
12 பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்த சரத் யாதவின் மாநிலங்களவை ஜேடியு எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவி பறிப்பு.
19 உத்தரப் பிரதேச மாநிலம், கதெüலி என்ற இடத்தில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 23 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்.
23 மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில், ஓபிசி பிரிவினரின் வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிப்பு.
23 ஐஎன்எஸ் மீடியா முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற உதவியதாக, கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை.
24 அந்தரங்கம் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பு.
28 பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா தலைவர் குர்மீத் சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
28 டோக்கா லாம் அருகே, இந்தியா, சீனா படைகளுக்கு இடையே 72 நாள்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.
28 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்பு.
செப்டம்பர்
3 இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமினம். பொன்.ராதா கிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
5 கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
7 மும்பையில் 1993-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தாஹிர் மெர்ச்சென்ட், ஃபெரோஸ் கான் ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
8 விமானங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு, விமானத்தில் பயணிக்க ஆயுள்கால தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
8 தில்லி அருகே குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான். இச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
14 ஆமதாபாத் - மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தொடங்கி வைத்தனர்.
20 கேரள மாநில முதல் பெண் டிஜிபியாக ஆர்.ஸ்ரீலேகா நியமிக்கப்பட்டார்.
29 மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.
அக்டோபர்
4 பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டார்.
6 ஆயுர்வேத மருந்துகள் உள்பட 27 பொருள்களுக்கான சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டது.
9 காற்று மாசுவை கட்டுப்படுத்த, தில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தாற்காலிக தடை விதித்தது. தீபாவளி நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
9 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
23 ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியாக உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தினேஸ்வர் சர்மா நியமிக்கப்பட்டார்.
31 மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வியாபம் ஊழல் வழக்கில் 490 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
31 கர்நாடக மாநில முதல் பெண் டிஜிபியாக நீலாமணி என் ராஜூ பொறுப்பேற்றார்.
நவம்பர்
7 தலைநகர் தில்லியில் புகையுடன் பனியும் கலந்து மிக கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஆகிய பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
10 மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் உள்பட 178 பொருள்களுக்கான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டது.
15 நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகினார்.
17 பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அணியே, உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இது, மூத்த தலைவர் சரத் யாதவ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
18 இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர், "உலக அழகி-2017' பட்டத்தை வென்றார். 17 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது.
21 சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி (70) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
28 ஹைதராபாதில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப் பங்கேற்றார்.
டிசம்பர்
7 இந்தியாவில் நடைபெறும் கும்ப மேளாவை, உலகிலேயே மதரீதியில் அதிக பக்தர்கள் பங்கேற்கும் விழாவாக யுனெஸ்கோ அங்கீகரித்தது.
8 நொய்டா அருகே நிதாரியில் சிறுமிகள், பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில், தொழிலதிபர் மொனீந்தர் சிங், அவரது உதவியாளர் சுரேந்தர் கோலி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
10 குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயல்வதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாகிஸ்தானுடன் சதி ஆலோசனை நடத்தியதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை, காங்கிரஸ் நிராகரித்தது.
14 எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
15 முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
15 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.
16 காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுபேற்றார்.
16 நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
18 குஜராத், ஹிமாசலப் பிரதேச பேரவைத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
21 பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!