2017-ஆம் ஆண்டின் உலகம்

ஜனவரி
1 ஐ.நா.வின் 9-ஆவது பொதுச் செயலராக ஆன்டோனியோ குட்டெரெஸ் பொறுப்பேற்றார்.
17 நைஜீரியாவை அச்சுறுத்தி வரும் போகோ ஹராம் பயங்கரவாத முகாம் என்று நினைத்து, பயங்கரவாதத்தால் புலம் பெயர்ந்த அகதிகள் முகாம் மீது அந்த நாட்டு விமானப் படை நிகழ்த்திய குண்டு வீச்சில் 100}க்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகினர்.
20 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டின் 45}ஆவது அதிபராகப் பொறுப்பேற்றார்.

27 பயங்கரவாத பாதிப்புகளுக்குள்ளான 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார்.
30 பயங்கரவாதத்துக்கு உதவினால் பாகிஸ்தானிகளும் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டியதைத் தொடர்ந்து, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் தலைவர் ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்தது.
இந்தியர்களுக்கு பெருமளவில் பயனளித்து வந்த அமெரிக்காவின் ஹெச்1}பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்து அணுகுண்டுகளை ஒன்றாக ஏந்திச் சென்று, தனித் தனி இலக்குகளைத் தாக்குதல் நிகழ்த்தும் புதிய ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதித்தது.
பிப்ரவரி
1 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்தனர்.
14 வட கொரிய அதிபர் கிம் ஜோங்}உன்னின் சகோதரர் கிம் ஜோங்}நாமை, மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்கள் விஷப் பொடியை நுகரச் செய்து படுகொலை செய்தனர். கிம் ஜோங்}உன்னின் தூண்டுதலில் பேரில் இந்த படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
21 படகு விபத்தில் பலியான 87 ஆப்பிரிக்க அகதிகளின் உடல்கள் லிபிய கடற்கரையில் கரையொதுங்கின.
22 சூரியனிலிருந்து 39 ஒளிவருட தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை, பூமியையொத்த 7 கோள்கள் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, பூமிக்கு வெளியும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை எழுந்தது.
மார்ச்
4 நிறவெறித் தாக்குதலில் இந்தியப் பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாள்களில், அமெரிக்காவில் 43 வயது கடை உரிமையாளர் ஹார்னிஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
10 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தென் கொரிய அதிபர் பார்க் கியூன்}ஹை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட ஹிந்து திருமணச் சட்டம், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
ஏப்ரல்
3 ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றொரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
4 சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ரசாயன குண்டு வீச்சில் 11 சிறுவர்கள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை சிரியா அரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
7 ரஷியா ஆதரவளித்து வரும் சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா முதல் தாக்குதல் நிகழ்த்தியது. பொதுமக்கள் மீதான ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியா அரசு விமானப் படை தளத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.
10 எகிப்தில் கிறித்துவ தேவாயலத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 43 பேரை படுகொலை செய்ததையடுத்து, அந்த நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
13 பாகிஸ்தானையொட்டிய ஆப்கன் பகுதியில், தலிபான் பயங்கரவாதி முகாம்கள் மீதுஅணுகுண்டுகளுக்கு அடுத்தபடியாக மிக சக்தி வாய்ந்த, "வெடிகுண்டுகளின் ராணி' என்றழைக்கப்படும் ஜிபியு}43 குண்டை வீசி அமெரிக்கா தாக்குல் நிகழ்த்தியது. இதில் 94 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
15 சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 68 சிறுவர்கள் உள்பட 126 பேர் உயிரிழந்தனர்.
21 ஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் 100}க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகினர்.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி மருத்துவரான விவேக் மூர்த்தியை, டிரம்ப் நிர்வாகம் பதவியிலிருந்து நீக்கியது.
26 முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கபட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியது.
மே
7 பிரான்ஸ் அதிபர் தேர்தலில், வர்த்தக வளர்ச்சிக்கு சாதகமான கொள்கைகளைக் கொண்ட இம்மானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றார்.
8 நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த 84 பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.
9 தென் கொரிய அதிபர் தேர்தலில் இடதுசாரி ஆதரவாளர் மூன் ஜே-இன் அமோக வெற்றியடைந்தார்.
அமெரிக்க உளவுத் துறையான எஃப்.பி.ஐ. தலைவர் ஜேம்ஸ் கோமி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வற்புறுத்தலால் ராஜிநாமா செய்தார்.
14 இணையதளம் மூலம் பரவிய "ரான்சம்வேர்' தாக்குதலால் 150 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
20 ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் ஹஸன் ரெüஹானி வெற்றியடைந்தார்.
22 பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.
26 இலங்கையின் தெற்குப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 91 பேர் உயிரிழந்தனர்.
ஜூன்
7 ஈரானில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நாட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு, சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றது அதுவே முதல் முறை.
13 வங்கதேசத்தில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளில் சிக்கி, ஏராளமான ராணுவத்தினர் உள்பட 105 பேர் உயிரிழந்தனர்.
14 பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
25 பாகிஸ்தானில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து, எரிபொருள் சேகரித்துக் கொண்டிருந்த 151 பேர், திடீரென ஏற்பட்ட தீ வெடிப்பால் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஜூலை
4 கண்டம் விட்டு கண்டம் பாயும் தனது முதல் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்தது.
9 ஒரு மாதமாக நீடித்த கடும் சண்டையைத் தொடர்ந்து, இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது.
11 ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்}பாக்தாதி, தாக்குதலில் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவித்தது.
28 பனாமா ஆவண ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, பாகிஸ்தான் பிரமதமர் நவாஸ் ஷெரீஃப் அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது.
ஆகஸ்ட்
17 ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில், கூட்டத்தினர் மீது வேன் மூலம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்; 120 பேர் காயமடைந்தனர்.
21 சரக்கு எண்ணெய்க் கப்பலுடன் அமெரிக்காவின் ஜான் எஸ். மெக்கெய்ன் போர்க் கப்பல் மோதியதில் 10 வீரர்கள் மாயமாகினர்; 5 பேர் காயமடைந்தனர்.
31 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃபை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்த அந்த நாட்டு நீதிமன்றம், அவரது சொத்துகளை முடக்க உத்தரவிட்டது.
செப்டம்பர்
7 மெக்ஸிகோவில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
12 ரஷியாவிடமிருந்து எஸ்}400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திட்டது.
19 மெக்ஸிகோவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 217 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆரம்ப நிலைப் பள்ளி இடிந்து விழந்தில் பலியான 21 குழந்தைகளும் அடங்குவர்.
27 சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும் என அந்த நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்தது.
28 அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான துப்பாக்கித் தாக்குதல் சம்பவமாக, லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயது அமெரிக்கர் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்த மர்மம் இன்னமும் நீடித்து வருகிறது.
அக்டோபர்
15 சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் நடத்தப்பட்ட மிகப் பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதலில் 276 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர்.
27 ஸ்பெயினிலிருந்து விடுதலை பெறுவது குறித்த பொதுவாக்கெடுப்பு முடிவின் படி, காடலோனியா மாகாணம் தனி நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. எனினும், இந்த பிரகடனத்தை ஸ்பெயின் நிராகரித்தது.
31 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத லாரி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
நவம்பர்
5 உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் கடல் கடந்த ரகசிய வர்த்தக நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர்கள் அமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டது.
12 ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 500}க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
15 ஜிம்பாப்வேயின் நீண்ட கால அதிபர் ராபர்ட் முகாபேவிடமிருந்து ஆட்சியதிகாரத்தை அந்த நாட்டு ராணுவம் கைப்பற்றியது.
21 பொதுமக்களின் போராட்டம் மற்றும் ராணுவம் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜிநாமா செய்தார்.
24 எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 235 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர்
1 யேமனின் முன்னாள் அதிபரும், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான உறவை முறித்துக் கொண்டவருமான அலி அப்துல்லா சலே, கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
6 இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாக அறிவித்து அதிர்ச்சியலையை ஏற்படுத்தினார்.
8 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
9 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமான சீன நிறுவனங்களிடம் ஒப்படைத்தது.
21 சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை நிராகரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா உள்ளிட்ட 127 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
24. அமெரிக்காவைத் தொடர்ந்து மத்திய அமெக்க நாடான கௌதமாலாவும் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!