‘கேட்’ தேர்வில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர் 100 சதவீத மதிப்பெண் பெற்றார்

நாடு முழுவதும் 20 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.) உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இவை உள்ளிட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொது சேர்க்கை தேர்வு (கேட்), கடந்த நவம்பர் 26–ந் தேதி, 140 நகரங்களில் நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில், 20 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில், சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சாய் பிரனீத் ரெட்டியும் அடங்குவார். 100 சதவீத மதிப்பெண் பெற்றவர்களில், 2 பெண்களும், என்ஜினீயர் அல்லாத 3 பேரும் இடம்பிடித்துள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டு தேர்வில், 100 சதவீத மதிப்பெண் பெற்ற 20 பேரும் ஆண்கள் மற்றும் என்ஜினீயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.