வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நிகழாண்டுக்கான நிதிக் கொள்கைக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் நான்காவது நிதிக்கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெளியிட்டார்.
இதில், ரெப்போ ரேட் விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே, அது 6 சதவீதமாகவே தொடர்கிறது. அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால் அதுவும் 5.75 சதவீதமாகவே உள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல், நடப்பாண்டில் 3 மற்றும் 4ம் காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!