பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்துள்ளனர். இந்த அரசை பொறுத்த வரையில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்ட நூலகங்களில் தொடங்கப்படும்.

மாணவ-மாணவிகளிடையே மன அழுத்தத்தை போக்குவதற்காக பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை பெறுவார்கள். வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும். 3 ஆண்டுகளுக்குள் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்பதற்கு பதிலாக 2 ஆண்டுகளிலேயே புதிய பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கோபி அருகே கொளப்பலூரில் புதிய டெக்டைல்ஸ் பார்க் அமைக்க அடுத்த மாதம் தொடக்க விழா நடைபெறுகிறது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 72 வகையான தொழிற்கல்வி பிளஸ்-1 வகுப்பில் இருந்தே கொண்டுவரப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலமாக மாதம் ஒரு முறை அரசு பள்ளிக்கூடங்கள் முழுவதுமாக சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துறையின் பேரில் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படும்.

இவ்வாறு இவர் கூறினார்.