ஓய்வூதிய பிரச்னைக்கு தீர்வு காணுமா அரசு

சென்னை: அரசு நிரந்தர தீர்வு காணாததால், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மாதம் தோறும் ஓய்வூதியம் கிடைக்காமல், தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, ஓய்வூதியர்கள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் உருவாக்கப்பட்டபோது, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து,

ஓய்வூதியத்திற்கான தொகை பிடிக்கப்பட்டது.அப்போது, ஓய்வூதியர்களைவிட, பணியில்
இருந்தோரின் எண்ணிக்கை அதிகம். அதனால், ஓய்வூதியர் அறக்கட்டளையில், அதிக தொகை இருந்தது. அதை, உயர்த்தும் முயற்சி யில், அப்போது இருந்த அதிகாரிகள் ஈடுபடவில்லை.
இந்நிலையில், 2003க்குப் பின் பணியில் சேர்ந்தோரின் ஊதியத்தில் இருந்து, ஓய்வூதியத்திற்கான தொகை பிடிக்கப்படுவதில்லை. தற்போது, அறக்கட்டளையில் உள்ள தொகை, 20 சதவீத
ஓய்வூதியம் வழங்கும் நிலையில் தான் உள்ளது. மீதி தொகையில் பாதியை அரசும், பாதியை
நிர்வாகமும் செலுத்தி வருகின்றன.ஆனால் அவை, மாதம் தோறும், உரிய நேரத்தில் செலுத்தாததால், 10ம் தேதி ஆகியும், ஒய்வூதியத் தொகை கிடைப்பதில்லை. இதனால் ஓய்வூதியர்கள், வீட்டு செலவுகளுக்கு, வட்டிக்கு பணம் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஓய்வூதிய அறக்கட்டளைக்கு, அரசு, தேவையான முன்பணத்தை செலுத்தினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; அரசு அதை, உடனே செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.