கார்த்திகை தீபத்திருநாள் ஐதீகம் அறிவோமா?!

கார்த்திகை
தீபத்திருநாள் தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகவும், அடி, நுனி காண இயலா அக்னி ரூபமான ஆதிசிவனுக்கு உகந்த நாளாகவும் வருடம் தோறும் கார்த்திகை மாத பெளர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இது மூன்று நாள் பண்டிகை. தீபத்திருநாளன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், தமிழகம் முழுவதிலும் உள்ள சிவாலயங்கள், முருகனின் அறுபடை வீடுகள், கேரளா மற்றும் இலங்கையின் திரிகோணமலை கதிர்காமம் முருகன் ஆலயங்கள் அனைத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
முருகப்பெருமானின் ஜனன வரலாறு தெரிந்தவர்களுக்கு கார்த்திகை தீபத்திருநாளுக்கான கதையும் தெரிந்திருக்கக் கூடும்.
கார்த்திகை தீபம் ஏன் பெருவிழவாகக் கொண்டாடப்படுகிறது என்பதற்கு இருவேறு ஐதீகங்கள் உலவுகின்றன.
  • ஒன்று குமரனின் ஜனனக் கதை,
  • இரண்டாவது... மும்மூர்த்திகளில் விஷ்ணுவும், பிரம்மனும் பரம்பொருள் சிவபெருமானின் அடி, முடி காண முயன்ற கதை
முதல் ஐதீகத்தின் படி;
அசுரனான சூரபத்மனை ஒழிக்க தேவாதி தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த பிள்ளைக் கடவுளே முருகன். அவதரிக்கையில் மகாதேவரின் அறுவகை ரூபங்களான தத்புருஷம், அகோரம், சத்யோஜதம், வாமதேவம், ஈசானம், அதோமுகம் எனும் ஆறு வடிவங்களின் பிரதிமைகளாக ஆறு முகமும், பன்னிரு கைகளும் கொண்டு அவதரித்தான் முருகன். சப்தரிஷிகளில் அறுவரின் மனைவியரான கார்த்திகைப் பெண்கள் சரவணப் பொய்கையில் ஆறுமுகனைக் கண்டெடுத்து வளர்த்தெடுத்து அவனுக்கு போர்க்கலை பயிற்றுவித்தனர்.
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு குழந்தையென தனித்திருந்த ஆறு முகங்களையும் உரிய காலம் வந்ததும் ஒன்றெனச் சேர்த்து கார்த்திகேயனாக ஆக்கியவள் அன்னை பார்வதி.

அவளே குமரனின் அதிகாரப்பூர்வமான அன்னையெனும் உரிமை பூண்டவள். கார்த்திகைப் பெண்கள் ஆறு சிறு மகவுகளாக அறுமுகனைக் கண்டெடுத்த நாளே முருகனின் ஜனன நாளாகக் கருதப்பட்டு அந்நாள் கார்த்திகை தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்டாவது ஐதீகத்தின் படி;
ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்குமிடையே ஒரு போட்டி வந்தது. இருவரில் யார் பெரியவர் என்று. நடுவராக சிவபெருமான்.

இருவரில் எவரொருவர் எனது அடியையோ, முடியையோ முதலில் கண்டு வந்து சொல்கிறீர்களோ? அவரே வென்றவர், இருவரில் அவரே பெரியவர் என போட்டியை அறிவிக்கிறார் சிவபெருமான். அறிவித்ததோடு நில்லாமல் அடி, முடி காண இயலா அகண்ட பேருருவமாக அக்னி ரூபமாக விஸ்வரூபமெடுத்து அண்டமெங்கும் வியாபித்து பஞ்சபூதங்களில் கனன்று சுழலில் அக்னியாக ஓங்கி நெடிதுயர்ந்து நிற்கிறார் மகாதேவர். மகாவிஷ்ணு வராக (பன்றி) ரூபமெடுத்து மண்ணுக்குள் குழி பறித்து சிவனின் அடி காணப் புறப்பட்டார், பிரம்மா தனது அன்னப்பட்சியில் ஏறி நுனி காணப் பறந்தார்.

இருவரும் பல யுகங்களாகப் பயணித்தும் அடியையும் காண முடியவில்லை, நுனியையும் காண இயலவில்லை. சோர்வின் முதற் தருணத்தில் உடனே தோல்வியை ஒப்புக்கொண்டு வராகப் பெருமான் மேலேறி வந்து தனது இயலாமையை நேர்மையுடன் ஒப்புக் கொள்கிறார். ஆனால், பிரம்ம தேவனுக்கோ தோல்வியை ஒப்ப மனமில்லை. முடி தேடிய அவரது பயணத்தின் இடையே தாழப் பறந்து வந்த தாழப்பூ மடல் ஒன்றைக் காண்கிறார் பிரம்மா, அதனிடத்தில், தாழை மடலே, நீ எங்கிருந்து வருகிறாய் என பிரம்மா வினவ, அது சொல்கிறது, தான் மகாதேவரின் திருமுடியில் இருந்து நழுவிப் பறந்து வருவதாகவும் அதாயிற்று 30 வருடங்களாயிற்று தான் கீழ் நோக்கி வரத்தொடங்கி ஆனால் இன்னமும் நிலத்தை தொடவில்லை என்கிறது கர்வத்துடன்.

இது போதாதோ பிரம்மனுக்கு, உடனே அந்தத் தாழம்பூவை தன்னுடன் சாட்சிக்கு வைத்துக் கொண்டு மகாதேவரை அணுகி நான் தங்களது முடியைக் கண்டு விட்டேன் என்று நடவாத ஒரு விஷயத்தை நடந்தாற் போல் சித்தரித்து பொய்யுரைக்கிறார். பிரம்மனின் பொய்யை உணர்ந்த அருணாச்சலேஸ்வரரான சிவபெருமான் ஜோதிர்மயமாகி பிரம்மனுக்கு பூமியில் கோயில் வழிபாடே இல்லாமலொழியட்டும் என்றும், பொய்யுரைத்த தாழம்பூ இனித் தனது பூஜைக்காரியங்களுக்கு உகந்ததல்ல என்றும் சாபமிட்டு மகா அக்னி ரூபமாக பூமியெங்கும் வியாபித்து தரிசனம் அளிக்கிறார். அந்த நாளையே திருவண்ணாமலையில் இன்றும் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாளாக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம்.
முருகன் என்றால் அழகு என்று மட்டுமல்ல பெருங்கோபம் என்றும் தான் பொருள். தேவர்களுக்கும், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரிஷிகளுக்கும் தொடர் தொல்லைகளை ஏற்படுத்தி வந்த சூரனை அழிப்பதற்காக கர்த்தா சிவபெருமானால் உருவாக்கப்பட்ட காரியம் அன்றோ முருகன்.

அதனால் மகாதேவரது ருத்ர குணம் முருகப்பெருமானுக்கும் உண்டு. தீபத்திருநாளில் அவ்விருவரது கோபங்களையுm தணித்து பக்தர்கள் பால் மனமிரங்கி அருள் பாலிக்க வேண்டியே அவர்களது மனம் குளிரும் வண்ணம் கார்த்திகை தீபம் அன்று ஊரெங்கும், தெருவெங்கும், வீடுகளெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு தெய்வ வழிபாடு செய்யப்படுகிறது.
சங்ககாலப் பண்டிகை...
தமிழகத்திலும், இலங்கையிலும், கேரளாவிலும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் சங்ககாலம் தொட்டே பெருவிழவாகக் கொண்டாடப்பட்டு வருவதற்கு அகநானூற்றிலும், புறநானூற்றிலும் செய்யுள் சான்றுகள் உண்டு. சிவபெருமான் ஜோதிமய தரிசனத்தை நினைவுகூறும் விதத்தில் கார்த்திகை திருநாள் அன்று குத்து விளக்குகள் முதல் சிறு அகல் விளக்குகள் வரை வீடெங்கும் விளக்கேற்றி வழிபாடு செய்வது தமிழர் வழமை.

அதற்கும் ஒரு கதை உண்டு, குத்து விளக்கின் அடித்தட்டுப்பகுதி பிரம்ம தேவர் எனவும், நடுத்தண்டுப்பகுதி மகாவிஷ்ணுவாகவும் மேற்புற தீபத்தட்டு சிவபெருமானாகவும் கருதப்பட்டு பூஜிக்கப்படுவது வழக்கம்.
மேற்சொன்னதெல்லாம் புராணம் மற்றும் நாட்டுப்புற பழம் நம்பிக்கைக் கதைகள் என எண்ணுவோருக்கு பகுத்தறிவாளர்களும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தீபத்திருநாளுக்கு ஒரு விளக்கம் சொல்லலாம், அதாவது பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்புக்கு முதலிடம் அளித்து பெருமழைக்காலமான கார்த்திகை மாதத்தில் மழையால் பூமி குளிர்கையில் அதை வெம்மைக் கதகதப்புக்குள் அடக்கி மிதமான சீதோஷ்ணம் நிலவச் செய்ய வேண்டி நம் அறிவார்ந்த பழந்தமிழர் முன்னோடிகள் கண்டறிந்த சூழல் நலன் சார்ந்த பண்டிகை எனவும் இதைக் கூறிக் கொல்ளலாம். தவறில்லை. பஞ்சபூதங்கள் இல்லையேல் இந்த உலகில்லை, உலகில்லையேல் மக்களேது?!
அதனால் தான் நிலத்தைக் கொண்டாட உழவர் திருநாள்
நீரைக் கொண்டாட இந்திர விழா, ஆடிப்பெருக்கு இத்யாதி விழாக்கள்...
மாதிரி நெருப்பைக் கொண்டாட கார்த்திகை தீபத்திருநாளையும் கண்டுபிடித்திருப்பார்களாயிருக்கும்.
ஆயினும் இம்மாதிரியான விழாக்காலங்களே தமிழரின் தனிச்சிறப்பை கட்டிக் காப்பதில் எப்போதும் உறுதுணையாக இருக்கின்றன என்பது மெய்!
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!