பிளஸ் 2 பொதுத்தேர்வு: டிச.11 முதல் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை (டிச.11)முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-

கடந்த 2016 மார்ச் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் இடைநிலைக் கல்வியில் முழுமையாக தேர்ச்சி பெற்று இரண்டாண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நேரடித் தனித்தேர்வர்களாக மார்ச் 2018-இல் நடைபெறும் தேர்வை எழுத முடியும். மேலும் இதுவே கடைசி வாய்ப்பாகும். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று 11-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பத்தை அபராதக் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கால அவகாசத்தைத் தாண்டி, விண்ணப்பிக்க விரும்புவோர் டிச.18-ஆம் தேதி முதல் டிச.20 வரை உரிய அபராதக் கட்டணத்துடன் (ரூ.1,000), விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தட்கலில் விண்ணப்பிக்க அவகாசம் இல்லை: இந்த முறை தட்கலில் விண்ணப்பிக்க தனியாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களைப் பெறலாம் .
தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வெழுதுவோர் (ஹெச் வகை) ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் (ஹெச்பி வகை) தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல்- பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187 மற்றும் ஆன்லைன் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை, சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பதை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிற்ககம் செய்ய முடியும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும் என்றார் வசுந்தராதேவி.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!