மரம் வளர்த்தால் மதிப்பெண்: பள்ளிக்கல்வியில் புது திட்டம்

'மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு, ஐந்து மதிப்பெண் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள் இணைந்து, தமிழக பள்ளி முதல்வர்கள் மாநாட்டை, சென்னையில் நடத்தின. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: 


தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை, நவம்பர் இறுதியில் வெளியிடப்படும். இது குறித்து, பொதுமக்கள், ௧௫ நாட்களுக்குள் கருத்து கூற அவகாசம் வழங்கப்படும். பிளஸ் ௨வை முடித்து, மாணவர்கள் மேல்படிப்புக்கு செல்லும் போதே, வேலை வாய்ப்புக்கான நம்பிக்கை ஏற்படும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்படும். தமிழக கலாசாரத்தை மீறாமல், எவ்வளவு படித்து வேலை வாய்ப்பு பெற்றாலும், தாய், தந்தையரை மதித்து காப்பாற்றும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்படும். எந்த வகையான, பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாதத்தில், 500 மையங்களில் இதற்கான பயிற்சி துவங்கும்.மாணவர்களை உற்சாகப்படுத்த, பள்ளிகளில் தினமும், ௧௫ நிமிடம் யோகா பயிற்சி நடக்கும். அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்தப்படும். 

மாநிலம் முழுவதும் அனைத்து உயர், மேல்நிலை பள்ளிகளில், ௪௩௭ கோடி ரூபாய் செலவில், கணினி மையம் அமைக்கப்படும். 3000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு இயற்கை ஆர்வத்தையும், சமூக பொறுப்பையும் உருவாக்க, மரம் வளர்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள, ஒரு கோடி அரசு பள்ளி மாணவர்களும், மரம் நட்டு, அதை வளர்த்து வந்தால், ஐந்து மதிப்பெண் வழங்க ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.