காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு; 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் புத்தகசுமையை குறைக்கும் விதமாக காலாண்டு தேர்வுவரை தேவையான புத்தகங்களை முதல் பருவ பாடப்புத்தகங்கள் என்றும் அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2–ம் பருவ பாடப்புத்தகங்கள் என்றும்,அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான பாடப்புத்தகங்கள் 3–வது பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் என்றும் 3 ஆக பிரித்து மாணவ–மாணவிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்தது.



அதன் அடிப்படையில் அந்தந்த பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட அன்றே வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2–ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் தலைமையில், செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகளின் ஏற்பாட்டில் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.  நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
அவற்றை மாணவ–மாணவிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். நேற்று ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.