மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்களை குறித்து பேசியதாவது:-

தமிழ்நாட்டில் கல்வியில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வந்து இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வருகிற எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கின்ற அளவுக்கு இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இதற்காக 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மாதத்திலே அங்கு பயிற்சிகள் தொடங்கப்படும்.தமிழக மாணவர்களுக்கு சந்திர மண்டலத்தை எட்டிப்பிடிக்கிற வகையிலே திறமை இருக்கிறது. அவர்களை ஊக்கப்படுத்தவும், ஆக்கப்படுத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மடிக்கணினி தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

‘ஸ்மார்ட் வகுப்பு’ கொண்டு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிற வகையில் 3 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.437 கோடியில் பள்ளிகளில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டு உலக செய்திகளை அவர்கள் தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் தமிழக மாணவர்களை மிஞ்ச முடியாது என்ற நிலையையும் அரசுஉருவாக்கும்.பாடத்திட்டத்தை மாற்ற உள்ளோம். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய அளவுக்கு பாடத்திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம்.

இந்த மாத இறுதிக்குள் அதை அறிவிப்போம். கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வருவதால் அனைவரையும் கல்வியாளர்களாக மாற்றிக்காட்டுவோம். மாணவர்கள் எதிர்காலத்தில் விமானத்தில் நாடு விட்டு நாடு சென்று பணிகளை செய்கின்ற வகையில் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.