ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 'சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில், ஜூலை, 18ல், ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகஸ்ட், 5ல், கோட்டையை நோக்கி பேரணியும், ஆக., 22ல், அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தினர். ஆனால், அரசு கண்டு கொள்ளாததால், வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று பகல், 12:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், பேச்சு நடக்கிறது. இதில், அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர், கணேசன் தலைமையில் பங்கேற்கின்றனர்.

'அரசு பேச்சு நடத்த முன் வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், நீண்ட கால பல பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்