பி.ஆர்க்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தரவரிசை பட்டியல், இன்று வெளியாகிறது. 

தமிழகத்தில் உள்ள, 49 ஆர்கிடெக்சர் கல்லுாரிகளில், 3,043 பி.ஆர்க்., இடங்கள் உள்ளன. இவற்றில், 2,049 இடங்கள், தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.

இதில் பங்கேற்க, மத்திய அரசின் தேசிய நுழைவு தேர்வான, 'நாட்டா'வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, 'நாட்டா' தேர்வில், பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டதால், முந்தைய ஆண்டுகளை விட, தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்தது. 

தமிழகத்தில், 2,009 பேர் மட்டுமே, 'நாட்டா' தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களிலும், 1,777 பேர் மட்டுமே, அண்ணா பல்கலையில் நடத்தப்படும் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, தரவரிசை பட்டியல், இன்று வெளியாகிறது. 'நாட்டா' தேர்வில், 200க்கு எடுத்த மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணை, 200 ஆக மாற்றி, 'கட் ஆப்' பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியல் இன்று, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங்கின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 19ம் தேதி துவங்குகிறது.