கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரும் நிலையில் பள்ளிக் கல்வி செயலாளர் வேறு துறைக்கு டிரான்ஸ்பரா?

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்த சபீதாவுக்கு, அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மட்டத்தில் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தபோது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும், பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். முதலாவதாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவை அங்கிருந்து மாற்றினார். அவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். 
அந்த நியமனத்துக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உதயசந்திரனை அத்துறையில் இருந்து மாற்ற அரசு தரப்பில் பல முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டபோது உதயசந்திரன் பெயரும் அதில் இடம் பெற்று இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் பெயர் அதிலிருந்து எடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் பதவிக்கு சோதனை வந்துள்ளது. அவர் எந்த நேரமும் அந்த பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகள் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பிறகு அரசுப் பள்ளிகளில் கல்வி கற்றலின் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக தமிழ்நாடு மாநில கல்வித்திட்டம்(Curriculum), பாடத்திட்டம் (Syllabus)பாடநூல் (Text Book) ஆகியவை தயாரிக்கும் பணி அசுர வேகத்தில் நடக்கிறது. 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்கள் உருவாக மாநில பாடத்திட்டததை மேம்படுத்த பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் இந்த பணிகள் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்கும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்  என்ற அச்சத்தில் வணிக நோக்கில் செயல்படும் சில பள்ளி நிர்வாகங்களும், சுயநலக் கூட்டமும் ஒரு சிறந்த அதிகாரியை அந்த பணியில் இருந்து மாற்றத் துடிக்கின்றன. அவர்கள் தூண்டுதலின் பேரில் தமிழக அரசு உதய சந்திரனை பணி மாற்றம் செய்தால் அது தமிழக அரசின் பாடத்திட்ட மேம்பாட்டு நடவடிக்கையை சீர்குலைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.