தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ. செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு, பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக கடந்த மார்ச் 7-ம் தேதி உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக அத்துறையின் செயலாளராக செயல்பட்டு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சபீதாவின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், உதயசந்திரனின் நியமனத்தை கல்வியாளர்கள் வரவேற்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ரேங்க் சிஸ்டம் ரத்து, நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி, பாடத்திட்டத்தில் மாற்றம், நூலகங்களுக்கு புத்தம் புதிய நூல்கள் என்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் உதயசந்திரன். அவரின் செயல்பாட்டிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டினர்.
இந்நிலையில், 'அமைச்சர் செங்கோட்டையனுக்கும், செயலாளர் உதயசந்திரனுக்கும் மோதல்'; 'ஆசிரியர்கள் பணி இடமாறுதல் வழங்குவதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு' என்று தகவல்கள் வெளியாகின. இந்தப் பிரச்னையில் உதயசந்திரனுக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் என்று பலரும் குரல் கொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், ''நீட் தேர்வு எதிரொலியாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் உள்ள தமிழக அரசின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அமைக்கப்பட்ட குழு நவீன காலகட்டத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப சிந்தனையுடன் தமிழக பாடத்திட்டத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்குடன் தங்களது பணிகளைத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் அக்குழுவில் இடம்பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உதயசந்திரனை பணிமாற்றம் செய்யவோ அல்லது பிற நபர்களின் பெயர்களை நீ்க்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கல்வித்தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறைச் செயலர் உதயச்சந்திரன், இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்பது குறித்து அவர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நீதின்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, கடந்த 25-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது. பிரதீப் யாதவ், கட்டுப்பாட்டில் உதயசந்திரன் செயல்படுவார். உதயசந்திரன் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்து பாடத்திட்ட வேலைகளை கவனிப்பார் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் அவர் வெளியிட்ட அறிக்கையில், “பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், அவருக்கு மேல் அதிகாரியாக, அதாவது பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.. இது உதயசந்திரனை இடமாற்றம் செய்வதைவிட மிக மோசமான தண்டனையும், அவமதிப்பும் ஆகும். இது கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில், ''வயல்காட்டையே மேய நினைத்தவர்களுக்கும், வரப்பைக்கூட மேய விடாதவருக்கும் நடந்த மோதல் முடிவுக்கு வந்தது. உதயசந்திரன் அதிகாரநீக்கம் செய்யப்பட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தனது முகநூல் பக்கத்தில், “நெ.து.சுந்தரவடிவேலுவுக்குப் பிறகு தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் விரிந்து பரந்த ஞானத்தோடும், தொலைநோக்குடனும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் எல்லாக் குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் என்கிற மனம் நிறைந்த நேசத்துடனும் பணியாற்றிய ஒரு செயலர் உதயசந்திரன். அவரை அவமானப்படுத்தியிருக்கிறது எடப்பாடி அரசு.
தமிழகத்திலுள்ள வலது, இடது, மத்தி என எல்லாச் சிந்தனைப் பள்ளிகளையும் சேர்ந்த அறிவுஜீவிகளை பாடத்திட்டம், கலைத்திட்டம் தயாரிப்பு, ஆசிரியர் பயிற்சிகள் என சகல கல்வி நடவடிக்கைகளிலும் இணைக்கப் பெருமுயற்சி எடுத்து வருபவர். கல்லூரி சாலையிலுள்ள பள்ளிக்கல்வி வளாகம் சமீப நாட்களாக அறிவாளிகளும், எழுத்தாளர்களும், குழந்தைகளும் நடமாடும் இடமாக மாறி வந்துகொண்டிருந்தது. பாடத்திட்டத்தில் ஆண்-பெண் சமத்துவக்கல்வி, சாதி மறுப்பு மனோபாவம், பகுத்தறிவுச் சிந்தனை, இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாணவர்களாக தமிழகக் குழந்தைகளை வளர்த்தெடுக்க நூற்றுக்கணக்கான புதிய கனாக்கள், திட்டங்கள் என இரவுபகல் தூக்கமில்லாமல் உழைத்துவரும் உதயசந்திரனை "தூக்கி விட" எடப்பாடி அன் கோ அரசு முடிவு செய்ததை முன்னுணர்ந்து வழக்குத்தொடுத்து, அந்த முயற்சியை நிறுத்தி வைத்தார்கள்.
இப்போது என்னடா செய்யலாம் என்று கூவத்தூரில் ரூம் போட்டு ஆலோசித்து அவருக்குமேலே ஒரு முதன்மைச்செயலர் பதவியை தற்காலிகமாக உருவாக்கி உதயசந்திரனை டம்மியாக்கிவிட முடிவு செய்திருக்கிறது. இதற்கு ஒரே காரணம் லஞ்ச லாவண்யம் புரையோடிப்போன கல்வித்துறையில் அதற்கெதிராக உருக்குபோல இந்த மனிதர் நின்றார் என்பது மட்டுமே. இதற்கு முன்னால், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் 12 ஆண்டுகளாக பாடத்திட்டத்தையே மாற்றி அமைக்காமல் வசூல் ராணியாகத் திகழ்ந்த முன்னாள் கல்வித்துறைச் செயலராக இருந்த அம்மாவை 12 ஆண்டுகாலமாக அம்மா அப்படியே வைத்திருந்த கறுப்புச் சரித்திரத்தை நேர்மையான ஒரு அதிகாரி வந்து மாற்றுவதா என்கிற சத்திய ஆவேசம்தான் எடப்பாடி அண்ட் செங்கோட்டையன் வகையறாவுக்கு. இந்த உத்தரவால் கல்வித்துறையின் ஊழல் எக்ஸ்பர்ட்டுகளான பல அதிகாரிகள் மகிழ்ச்சியடையலாம். 'வச்சாண்டா ஆப்பு' என்று அவர்கள் ஆட்டம் போடலாம். புடுங்கித்திங்கும் அ.தி.மு.க எம் எல்.ஏ-க்கள் மகிழ்ச்சியடையலாம்.