திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்

புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு கடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

-திருவண்ணாமலையில், நேற்று துவங்கிய புத்தக திருவிழா, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், 180க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்களை குவித்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கியில் கடனுதவி பெறுவதற்கு, தி.மலை கலெக்டர், பிரசாந்த் 
எம்.வடநேரே, ஏற்பாடு செய்துள்ளார்.


இந்த கடன் தொகையை, ஆறு தவணைகளில், சம்பளத்தில் இருந்து திருப்பிச் செலுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. 


இதற்காக, புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திலேயே, வங்கிகள், வழிகாட்டி மையம் அமைத்துள்ளன.புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புத்தகங்கள் வாங்க, வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, இதுவே 
முதல்முறை.