தமிழகத்தில் இதுவரை 5,600 பேருக்கு 'டெங்கு'

தமிழகத்தில், நடப்பாண்டில் இதுவரை, 5,600 பேர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும், நான்கு மாதங்களாக, டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவிப்பின்படி, கேரளாவில், அதிகபட்சமாக, 13 ஆயிரத்து, 913 பேர் பாதிக்கப்பட்டு, 23 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக, தமிழகத்தில், டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது; ஆங்காங்கே, இறப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. ஆனாலும், இறப்புகளுக்கு வேறு காரணங்களை கூறி, அரசு சமாளித்து வருகிறது.
தற்போது, சென்னையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும், டெங்கு பாதிப்பால், ௧௫௦ பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாவட்டங்களில் நிலைமை வேறு. டெங்கு பாதிப்பை தடுப்பதில், அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே, இதற்கு காரணம்.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், ''தமிழகத்தில், ஜன., முதல் இதுவரை, 5,600 பேருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். இப்போது, டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது,'' என்றார்.