ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு விதித்த தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுதில்லி: ஐஐடி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஐஐடி ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முயற்சித்த மாணவர்கள் அனைவருக்கும் கருணை அடிப்படையில் 18 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ஐஐடி நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், அந்தக் கேள்வியில் உள்ள தவறைப் புரிந்து கொண்டு சரியாகப் பதிலளித்த சக மாணவர்களுக்கு இது பாதிப்பை உருவாக்கும். எனவே, ஏற்கெனவே நடத்திய தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டும். மேலும், ஐஐடியில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கும், மாணவர்கள் தரவரிசைப் பட்டியலைத் தயாரிப்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இதில் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா அகர்வால், தமிழகத்தைச் சேர்ந்த பலராம் விஷ்ணு சுப்ரமணி உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சென்னை ஐஐடி ஆகியவற்றுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இம்மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ஐஐடி சார்பில் வழக்குரைஞரும் ஆஜராகி, விடைத்தாள்களை மீண்டும் மதிப்பீடு செய்ய நீண்ட காலம் பிடிக்கும்.

கருணை மதிப்பெண் அளிப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு நடைமுறைத் தீர்வாக அமையும்' என்றனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம். இது தொடர்பான எந்தவித மனுவையும் உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது. இந்த உத்தரவை அனைத்து மாநில உயர் நீதிமன்றப் பதிவாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். வழக்கு விசாரணையை ஜூலை 10- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது மத்திய அரசு மற்றும் ஐஐடி நிர்வாகத்தின் வேண்டுகோளினை ஏற்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அத்துடன் இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்கக் கூடாது என்று அறிவுறுத்திய நீதிமன்றம். இம்முறை தேர்வுகளை நடத்திய சென்னை ஐஐடி நிர்வாகம் குளறுபடிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.