மதுரையில் 'ஆசிரியர் இல்லம்' இடம் தேர்வு

மதுரையில் கல்வித்துறை சார்பில் 3 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள ஆசிரியர் இல்லத்திற்கான இடம் தேர்வு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.'சென்னை, மதுரை, கோவை உட்பட மாவட்டங்களில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் இல்லம் கட்டப்படும்,' என முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் '110' விதியின் கீழ் அறிவித்தார்.


இதற்கான இடம் தேர்வு பிற மாவட்டங்களில் முடிந்த நிலையில், மதுரையில் மட்டும் இழுபறி ஏற்பட்டது. முதலில் புதுதாமரைப்பட்டியில் தேர்வு செய்யப்பட்டு நிலம் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவும் பிறப்பித்தது. ஆனால், துாரமாக உள்ளதால் கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். பின்னர் கல்வித்துறைக்கு சொந்தமாக ஜெய்ஹிந்துபுரம் மார்க்கெட் பகுதி இடமும் குறுகியதாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டசபை கொள்கை விளக்க குறிப்பில் விபரம் இடம் பெறாததால் மதுரை ஆசிரியர் இல்லம் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. கல்வி அதிகாரிகள் தலையிட்ட பின், விரைவில் இடம் தேர்வு செய்ய அரசு கெடு விதித்தது. இதன் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் கல்வி அலுவலர்கள் மூன்று இடங்களை தேர்வு செய்து ஆய்வு செய்தனர். இதில் அவனியாபுரம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 50 சென்ட் இடத்தில் இல்லம் கட்ட முடிவானது.


அதிகாரி ஒருவர் கூறியதாவது: அவனியாபுரம் பள்ளி வளாகம் ஆறு ஏக்கரில் அமைந்துள்ளது. வகுப்பறை கட்டடங்கள் 2 ஏக்கர் பகுதியில் உள்ள நிலையில், 50 சென்ட் இடத்தில் இல்லம் கட்டப்படும். விமான நிலையம் அருகில் உள்ளது. தென் மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் மண்டேலா நகரில் இருந்து எளிதில் வரமுடியும். பொதுப்பணித்துறை ஆய்வுக்கு பின் கட்டடப் பணி துவங்கும், என்றார்.