பி.எப்., தொகை விபரம் தெரிவிக்க உத்தரவு

வருங்கால வைப்பு நிதி விபரத்தை, ரேஷன் ஊழியர்களுக்கு தெரிவிக்கும்படி, இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சம்பளத்தில் இருந்து, வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அதை, அதிகாரிகள் முறையாக கணக்கில்
செலுத்துவதில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, வருங்கால வைப்பு நிதி விபரத்தை, ஊழியர்களுக்கு தெரிவிக்கும்படி, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, கூட்டுறவு சங்க நுகர்வோர் பணிகள் கூடுதல் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள

சுற்றறிக்கை: ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்டு வரும், வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் நிர்வாகத்தின் பங்கு ஆகியவற்றை, முறையாக உரிய கணக்கில் செலுத்தி, அதை கண்காணிக்க வேண்டும்; அந்த விபரத்தை, ஆண்டுக்கு ஒரு முறை, ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.