BSNL வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கட்டண திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக சலுகைகள் அறிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கட்டண திட்டங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த சலுகைகளை அறிவித்துள்ளதாக பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பூங்குழலி கூறினார்.

கட்டண திட்டம்

தொலை தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது அதற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனமும் களம் இறங்கியுள்ளது. ‘இதவிட ஒசந்தது எதுவுமில்லை’ என்று பெயர் சூட்டி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கட்டண திட்டங்களை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலை தொடர்பு வட்ட தலைமை பொதுமேலாளர் என்.பூங்குழலி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

3 ஜி.பி. டேட்டா

பி.எஸ்.என்.எல். மொபைல் வாடிக்கையாளர்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 4 ‘சூப்பர் பம்பர்’ சிறப்பு கட்டண திட்டங்களை அறிவித்துள்ளோம்.

ரூ.333-க்கு ரீசார்ஜ் செய்தால், 90 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 3 ஜி.பி. டேட்டா என்ற வீதத்தில் சேவை வழங்கப்படும். இந்த திட்டத்தின் பெயர் எஸ்.டி.வி. 333. இணையதள வசதிகளை மட்டும் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் உபயோகமாக அமையும்.

இலவச அழைப்பு

எஸ்.டி.வி.349 திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு 2 ஜி.பி. டேட்டாவும், எஸ்.டி.டி., மற்றும் உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும். எஸ்.டி.வி. 395 திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்தால், 71 நாட்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டாவும், பி.எஸ்.என்.எல். அழைப்புக்கு 3 ஆயிரம் நிமிடமும், பிற நெட்வொர்க் அழைப்புக்கு 1,800 நிமிடங்களும் இலவசமாக வழங்கப்படும்.

எஸ்.டி.வி. 339 திட்டத்தின் கீழ் ரூ.339-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 3 ஜி.பி. டேட்டாவும், தினமும் 25 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

வேகம் அதிகரிப்பு

இதை போல தரைவழி ‘பிராட்பேண்ட்’ இணைப்புகளில் மாதம் கட்டணம் ரூ.675 அல்லது அதற்கு மேல் உள்ள திட்டங்களில் டேட்டா வேகம் தற்போது 2 எம்.பி.பி.எஸ். ஆக உள்ளது. இது 4 எம்.பி.பி.எஸ். வேகமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு வட்டத்தில் 120 நகரங்களில் 10 எம்.பி.பி.எஸ்., டேட்டா வேகம் தரக்கூடிய ‘வைபை ஹாட் ஸ்பாட்டுகள்’ நிறுவப்படும். தமிழகம் முழுவதும் 2-ஜி செல்போன் கோபுரங்கள் 5 ஆயிரத்து 851-ம், 3-ஜி செல்போன் டவர்கள் 2 ஆயிரத்து 775-ம் உள்ளன. நடப்பு ஆண்டில் 3-ஜி செல்போன் கோபுரங்கள் 1,428-ம், 4-ஜி செல்போன் கோபுரங்கள் 1,127-ம் நிறுவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.